| ADDED : மார் 07, 2024 06:15 AM
தேனி: தேனி பழனிசெட்டிபட்டியில் முறையான ஆவணங்கள் இன்றியும், மது போதையில் ஆட்டோக்களை இயங்கிய 13 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரிக்கின்றனர்.தேனி எஸ்.பி., சிவபிரசாத் முறையான ஆவணங்கள் இல்லாமல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார். இதன்படி பழனிசெட்டிபட்டி இன்ஸ்பெக்டர் சிவராமகிருஷ்ணன், எஸ்.ஐ.,க்கள் பாலசுப்பிரமணியன், மணிமாறன், பயிற்சி எஸ்.ஐ., அஜய்சர்மா தலைமையிலான போலீசார், பூதிப்புரம் ரோட்டில் உள்ள தனியார் தியேட்டர் முன் நேற்று இரவு சோதனையில் ஈடுபட்டனர். அப்போது 3 ஆட்டோக்களின் டிரைவர்கள் மது குடித்து ஆட்டோ ஓட்டியது தெரியவந்தது. மேலும், 10 ஆட்டோக்களில் முறையான ஆவணங்கள் இல்லை. அதில் ஒரு ஆட்டோ மதுரையில் இருந்து தேனி வரை எவ்வித ஆவணங்கள் இல்லாமல் ஓட்டி வந்தது கண்டறியப்பட்டது. இன்ஸ்பெக்டர் கூறுகையில், 'விதிமீறலில் ஈடுபட்ட 13 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் வட்டார போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்துள்ளோம்', என்றார்.