| ADDED : ஜன 11, 2024 04:25 AM
பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி அட்டை தாரர்களுக்கும் தலா ஒருகிலோ பச்சரிசி, சர்க்கரை, ரூ.ஆயிரம் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அரிசி கார்டு தாரர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டது. அதில் பொருட்கள் வழங்கும் தேதி, நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது. கலெக்டர் தலைமையிலான குழு விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்தது. தொடர் மழையால் செங்கரும்புகள் ரேஷன் கடைகளில் வருவதில் தாமதம் ஏற்பட்டது. சில பகுதிகளில் ரேஷன் பணியாளர்கள் கரும்பு தோட்டங்களுக்கு சென்று தங்களது ஒதுக்கீட்டு கரும்பை வாகனங்களில் ஏற்றி கடைகளுக்கு கொண்டு வந்தனர்.நேற்று முதல் பொங்கல் தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது. பல கடைகளுக்கு செங்கரும்பு வந்து சேரவில்லை. குறிப்பிட்ட நாளில் பொங்கல் தொகுப்பு வழங்க வேண்டும் என்பதால் பொதுமக்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, ரூ. 1000 வழங்கினர். அடுத்து கரும்பு பெற்று கொள்ளுமாறு கூறினர். செங்கரும்பு, வேட்டி, சேலை நுாறு சதவீதம் ஒதுக்கீடு செய்யாமல் 85 முதல் 90 சதவீத அளவில் வழங்கப்பட்டுள்ளது. 10 சதவீத பேரை எவ்வாறு சமாளிப்பது என ரேஷன் கடை பணியாளர்கள் புலம்புகின்றனர்.செங்கரும்பு தாமதம் பற்றி கூட்டுறவுத்துறையினர் கூறுகையில், மாவட்டத்தில் 4.30 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில் 3.76 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு முதலில் பொங்கல் தொகுப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டது. பின்னர் அனைத்து அரிசி கார்டுகளுக்கும் பொங்கல் தொகுப்பு என்ற அறிவிப்பு வந்த போது 4.26 லட்சம் கார்டுகள் தேர்வு செய்யப்பட்டது. அதன்படி சின்னமனுார், கோட்டூர், தேவதானப்பட்டியில் இருந்து 75 விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. மழையின் காரணமாக கரும்பு ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பணி தாமதம் ஆனது. நேற்று மதியம் வரை 3.49 லட்சம் கரும்புகள் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அனைத்து கடைகளுக்கும் 100 சதவீத கரும்புகள் வழங்கப்படும் என்றனர்.