| ADDED : டிச 06, 2025 05:18 AM
கம்பம்: சுருளிப்பட்டியில் ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தும் யானைக் கெஜம் ரோடு குண்டும் குழியுமாக உள்ளதால் பயன்படுத்த முடியாமல் விவசாயிகள் அவதியில் உள்ளனர். சுருளிப்பட்டியில் மலையடிவாரம் வரை நூற்றுக்கணக்கான ஏக்கரில் திராட்சை, வாழை சாகுபடியாகிறது. தினமும் காலை, மாலையில் விவசாயிகள் டூவீலர்,நான்கு சக்கர வாகனங்களில் தோட்டங்களுக்கு செல்வார்கள். வேலைக்கு செல்லும் தொழிலாளர்களும் ஆட்டோவில் சென்று வருகின்றனர். சுமார் 4 கி.மீ. தூரம் உள்ள இந்த யானைகெஜம் ரோடு பராமரிப்பு செய்து 5 ஆண்டுகளை கடந்து விட்டது. இதனால் ரோடு பயன்படுத்த முடியாத அளவிற்கு குண்டும், குழியுமாக உள்ளது. வேளாண் விளைபொருள்களை கொண்டு வருவதற்கும், இடுபொருள்களை தோட்டங்களுக்கு கொண்டு செல்வதில் பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ரோட்டை பராமரிக்க பி.டி.ஓ.,நடவடிக்கை எடுக்க விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.