| ADDED : மே 06, 2024 12:43 AM
சின்னமனூரில் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான புத்தகங்களை கொண்ட அறிவுசார் நூலகம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது. கம்பம் எம்.எல்.ஏ., ராமகிருஷ்ணன் முயற்சியில் இந்த நூலகம் அமைக்கப்படுகிறது. மத்திய அரசின் தேர்வாணையம் நடந்தும் இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி, வனவியல் பணி உள்ளிட்ட தேர்வுகளுக்கும், மாநில அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் இந்த நூலகம் அமைக்கப்படுகிறது. இந்த நூலகத்தில் அனைத்து வகையான நூல்களும் இடம் பெற உள்ளது.இதற்கான பூமி பூஜை கடந்தாண்டு செப்டம்பர் முதல் வாரம் நடந்து, பணிகள் துவங்கியது. பணிகளை துவக்கி எட்டு மாதங்களை கடந்தும் நிறைவு பெறவில்லை. இன்னமும் 50 சதவீத பணிகள் மீதமுள்ளன. நகராட்சிகளின் மண்டல பொறியாளர் பெயருக்கு ஆண்டிற்கு ஒரு முறை ஆய்வு செய்கிறார். ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பீட்டில் செய்யும் வளர்ச்சி பணிகளை, மண்டல பொறியாளர் அடிக்கடி ஆய்வு செய்து பணிகள் தரமாக உள்ளதா என்றும், குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பணிகளை முடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஆனால் சின்னமனுார் நகராட்சி பொறியாளரும் சரி, மண்டல பொறியாளரும் சரி கள ஆய்வு என்பதை மேற்கொள்வதே இல்லை. எனவே ஆமை வேகத்தில் நடைபெறும் அறிவுசார் நூலக கட்டட பணிகளை துரிதப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாசகர்கள், மாணவர்கள், பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.