| ADDED : பிப் 02, 2024 06:07 AM
தேனி: மூதாட்டியை பாலியல் தொந்தரவு செய்து கொலை செய்ய முயற்சித்ததில் கைதாகி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட கைதி, அவ்வழக்கில் நேற்று தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின் தப்பியோடினார்.கூடலுார் ஆங்கூர்பாளையம் மந்தையம்மன் கோயில் 80 வயது மூதாட்டி 2023 டிச. 6ல் மாலையில் அங்குள்ள தென்னந்தோப்பில் கீரை பறித்துக் கொண்டிருந்தார்.அங்கு சென்ற சாமாண்டிபுரம் விஜயகுமார் 21, அவரை சென்று கீழே தள்ளி தாக்கி, பாலியல் பலாத்காரம், கொலை செய்ய முயற்சித்தார். பின்னர் தப்பி ஓடினார்.விஜயகுமாரை பிடிக்க கூடலுார் வடக்கு போலீசார், நண்பர் பிரபுதேவா என்பவரை உதவிக்கு அழைத்தனர். அவருடன் சேர்ந்து தேடிய போது முல்லைப் பெரியாற்றில் விழுந்த பிரபுதேவாவை 4 நாட்கள் தேடிய பின் இறந்த நிலையில் மீட்கப்பட்டார். பின் கைதான விஜயகுமார் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். தப்பியோட்டம்
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் நடந்துவருகிறது.நேற்று விசாரணைக்கு மதுரையில் இருந்து விஜயகுமார் ஆயுதப்படை போலீசார் இருவர் மூலம் தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.பின்னர் மீண்டும் சிறைக்கு கொண்டு செல்லும் போது, போலீசாரிடம், டீ' குடிக்க வேண்டும் எனக்கேட்டு டீக்கடைக்கு அழைத்து சென்ற நிலையில் விஜயகுமார் தப்பி ஓடினார். அவரை மதுரை சிறை கண்காணிப்பாளர் சதீஸ்குமார் தலைமையிலான சிறை காவலர்கள் தேடி வருகின்றனர். அவர் மீது, 10க்கும் மேற்பட்ட குற்றவழக்குகள் உள்ளன. தண்டனை பெற்றவர்
விஜயகுமார், 2019 செப்., 20ல் அப்பகுதியில் உள்ள குளத்தில் ஆடுகளை குளிப்பாட்டிக் கொண்டிருந்த 15 வயது சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில், தேனி மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில் கடந்த ஜன.,30ல் 21 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றது குறிப்பிடத்தக்கது.