| ADDED : பிப் 15, 2024 06:16 AM
தேனி: தேனி நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷாவை கண்டித்து நகரில் கவுன்சிலர்கள் போஸ்டர் ஒட்டியுள்ளனர்.தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனராக ஜஹாங்கீர் பாஷா 2023 டிச., முதல் பணிபுரிந்து வருகிறார். பிப்.,12ல் நகராட்சித்தலைவர் ரேணுப்பிரியா தலைமையில் நகராட்சி கூட்டம் நடந்தது. கமிஷனர் முன்னிலை வகித்தார். அக்கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்து துணைத்தலைவர் செல்வம் உள்ளிட்ட 15 கவுன்சிலர்கள் தீர்மானங்கள் நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போது கமிஷனர் கூறுகையில்,' 9 கவுன்சிலர்கள் தான் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர், எனவே தலைவர் கூட்டத்தை நடத்தலாம்' என தெரிவித்தார். இதற்கு துணைத்தலைவர் தலைமையிலான கவுன்சிலர்கள் கமிஷனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தீர்மானங்கள் 17 பேர் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டதாக கூறி தலைவர் கூட்டத்தை முடித்தார். இதனை கண்டித்து துணைத்தலைவர், அவரது ஆதரவு கவுன்சிலர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். நீதிமன்ற உத்தரவை மீறிய கமிஷனர் மீது செயல்படுவதாக வழக்கு தொடுக்கப்படும் என்றனர். கலெக்டர். நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனருக்கு 16 கவுன்சிலர்கள் புகார் அனுப்பினர்.தேனி நகர்பகுதிமுழுவதும் நகராட்சி கவுன்சிலர்கள் சார்பில் என குறிப்பிட்டு கமிஷனரை கண்டித்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. அதில் தி.மு.க., வைச் சேர்ந்த நகராட்சி துணைத்தலைவர், கவுன்சிலர்களை ஒருமையில் பேசி, நகராட்சி நிர்வாகத்தை சீரழித்து, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் கமிஷனரை கண்டிக்கிறோம்' என்றிருந்தது.தேனி நகராட்சி தலைவர், துணைத் தலைவரிடையேயான கோஷ்டி பிரச்னையால் மாவட்ட தலைநகரில் வளர்ச்சி பணிகள் முடங்கி வருவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.