கம்பம் : பொங்கல் பரிசு தொகுப்பில் கரும்பு வழங்கப்படுவதால், கொள்முதல் செய்வதற்கு வேளாண் இணை இயக்குநர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் நேற்று காலை சின்னமனுார் கரும்பு தோட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட நிலையில், பரிசுத் தொகுப்புடன் ஏலக்காய் வழங்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், முழு கரும்பு, ரூ.ஆயிரம் ரொக்கம் தருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு கடந்த பல ஆண்டுகளாக தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. செங்கரும்பைஅந்தந்த மாவட்டங்களில் கொள்முதல் செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. தேனி மாவட்டத்தில் சின்னமனுார், பெரியகுளம், தேனி ஆகிய மூன்று ஊர்களில் மட்டுமே கடந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்டது. பெரியகுளத்தில் 65 ஆயிரம், தேனியில் 20 ஆயிரம், சின்னமனுாரில் 3 லட்சத்து 40 ஆயிரம் கரும்புகள் கடந்தாண்டு கொள்முதல் செய்யப்பட்டன. ஆய்வு துவக்கம்
இந்தாண்டு கொள்முதல் செய்வது தொடர்பாக தேனி வேளாண் இணை இயக்குனர் பன்னீர்செல்வம் தலைமையில், கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, துணை இயக்குனர் தேன்மொழி, உதவி இயக்குனர் பாண்டி ஆகியோர் சின்னமனுார் கரும்பு தோட்டங்களை நேற்று ஆய்வு செய்தனர். செங்கரும்பு கொள்முதல் செய்ய ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஒரு கூட்டுறவு சார்பதிவாளர், கூட்டுறவு சங்க செயலர், வேளாண் அலுவலர் அடங்கிய மூவர் குழு நியமிக்கப்பட்டுள்ளனர். பரிசுத்தொகுப்பில் ஏலக்காய்
பொங்கல் பரிசு தொகுப்பில் முன் முந்திரி, திராட்சை, ஏலக்காய் வழங்கப்பட்டது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக அந்த பொருட்களை நிறுத்தி விட்டனர். குறைந்தபட்சம் ஏலக்காய் மட்டுமாவது இந்தாண்டு பரிசு தொகுப்பில் சேர்த்து வழங்க பொது மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.