| ADDED : ஜன 09, 2024 06:06 AM
கூடலுார் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பை எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திடீரென குறைப்பதால் லோயர்கேம்ப் குடிநீர் பம்பிங் ஸ்டேஷனில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.லோயர்கேம்ப் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் கூடலுார், கம்பம், காமயகவுண்டன்பட்டி, பண்ணைப்புரம், கோம்பை, தேவாரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. முல்லைப் பெரியாற்றிலிருந்து பம்பிங் செய்து நீர்த்தேக்க தொட்டி மூலம் சேகரிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட பின் குளோரினேசன் செய்து குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.கடந்த சில நாட்களாக முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திடீரென நீர் திறப்பு அதிகரிப்பதும், பின் குறைப்பதுமாக உள்ளனர். நீர் திறப்பை குறைக்கும் போதும், அதிகரிக்கும் போதும் முன்கூட்டியே அதற்கான தகவலை லோயர்கேம்ப் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுக்கு தெரிவிப்பது இல்லை. திடீரென நீர் திறப்பை குறைப்பதால் பம்பிங் வால்வில் மண் சிக்கிக் கொள்கிறது. முன்கூட்டியே தகவல் தெரிந்தால் பம்பிங் செய்வதை நிறுத்தி சீரானபின் பம்பிங் செய்தால் பிரச்னை ஏற்படாது. நேற்று முன்தினம் வினாடிக்கு 511 கன அடியாக இருந்து நீர் திறப்பு திடீரென 105 கன அடியாக குறிக்கப்பட்டதால் பம்பிங் ஸ்டேஷனில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் புலம்பினர்.