| ADDED : ஜன 19, 2024 05:47 AM
தேனி: தேனியில் இருந்து போடேந்திரபுரத்திற்கு கணவருடன் டூவீலரில் சென்ற பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தாலிச் செயினை பறித்து இரண்டு திருடர்கள் தப்பிச் சென்றனர்.வீரபாண்டி அருகே போடேந்திரபுரம் மேலத்தெரு துர்காதேவி 37. இவரது கணவர் கருப்பசாமி 40. கோவை மத்திய துணை பாதுகாப்பு படைப்ப பிரிவில் (சி.ஆர்.பி.எப்.,) பணிபுரிகிறார். விடுமுறைக்கு தேனி வந்த கருப்பசாமி, ஜன., 17ல், மனைவி, மகளுடன் டூவீலரில் தேனிக்கு வந்து துணிக்கடையில் ஆடைகள் வாங்கிவிட்டு குடும்பத்தினருடன் இரவு 8:30 மணிக்கு டூவீலரில் ஊருக்கு திரும்பினார். முத்துத்தேவன்பட்டி வீரபாண்டி மெயின்ரோடு விநாயகர் கோயில் அருகே சென்ற போது பின்னால் டூவீலரில் வந்த 2 வாலிபர்கள், கணவருடன் பின்னால் அமர்ந்து வந்த துர்காதேவி கழுத்தில் அணிந்திருந்த ஏழு பவுன் தங்கத் தாலியை இழுத்தனர். இதில் டூவீலரில் இருந்து துர்கா, அவரது கணவர், மகள் கீழே விழுந்தனர். துர்காவிற்கு கழுத்து, நெற்றி, கால் பகுதியில் காயங்கள் ஏற்பட்டன. வாலிபர் கைகளில் மூன்றரை பவுன் அளவிலான பாதியளவு செயினும், துர்காதேவியிடம் மீதியுள்ள மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியும் சிக்கியது. பாதிக்கப்பட்ட சி.ஆர்.பி.எப்., வீரர் குடும்பத்தினருடன் வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்றனர். வீரபாண்டி எஸ்.ஐ., ராமகிருஷ்ணன் வழிப்பறி திருடர்கள் குறித்து விசாரிக்கின்றார்.