உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 1,167 ஏரிகளில் 1,150 தண்ணீரின்றி வறண்டன பராமரிக்காததால் புதரில் மாயமாகும் அவலம் ஆக்கிரமிப்புகளில் சிக்குவதாக விவசாயிகள் புலம்பல்

1,167 ஏரிகளில் 1,150 தண்ணீரின்றி வறண்டன பராமரிக்காததால் புதரில் மாயமாகும் அவலம் ஆக்கிரமிப்புகளில் சிக்குவதாக விவசாயிகள் புலம்பல்

கடம்பத்துர்:திருவள்ளூர் மாவட்டத்தில் கூவம், கொசஸ்தலை, அடையாறு, ஆரணி ஆகிய ஆறுகள் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்நிலையில், நீர்வளத் துறையின் கீழ், 586 ஏரிகள் மற்றும் ஒன்றிய கட்டுப்பாட்டில் 581 ஏரிகள் என, மொத்தம் 1,167 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளை நம்பி, 1 லட்சத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். இந்நிலையில், ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து கால்வாய்கள் போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி வீணாகி வருகின்றன. மேலும், பல ஏரிகளுக்கு செல்லும் வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ளன. இதனால், ஏரியில் நீர் சேகரமாவதில் பாதிப்பு ஏற்படுவதுடன், ஏரிகளும் நீரின்றி வறண்டு விடுகின்றன.மேலும், ஏரிகளில் துார் வாரும் பணி என்ற பெயரில் முறைகேடாக சவுடு மண் அள்ளப்பட்டதால், பல ஏரிகளில் நீர் சேகரமாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.இதனால், ஏரிகள் பள்ளத்தாக்காக மாறியுள்ளதோடு, புதர்மண்டி காணப்படுகிறது. தற்போது, ஒரு சொட்டு நீர் கூட இல்லாமல் வறண்டு கிடப்பதால், இந்த ஏரிகளை நம்பியுள்ள விவசாயிகள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். இதற்கு, அதிகாரிகள் அலட்சியமே காரணம் என, விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.மேலும், பல ஏரிகள் முறையான பராமரிப்பில் இல்லாததால், ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் சிக்கி குடியிருப்புகளாகவும், விளை நிலங்களாகவும், சில ஏரிகள் குப்பை கொட்டும் இடமாகவும் மாறியுள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில் 1,167 ஏரிகளில், தற்போது 1,150 ஏரிகள் தண்ணீரின்றி வறண்டு கிடக்கின்றன. இதற்கு, அதிகாரிகள் வரத்து கால்வாய்களை முறையாக சீரமைக்காததே காரணம் எனவும், ஏரிகள் பராமரிப்பில் அலட்சியம் காட்டுவதாகவும் விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பொதுப் பணித்துறை மற்றும் ஒன்றிய அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளை ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீர் சேகரமாகும் வகையில் வரத்துகால்வாய்களை சீரமைத்து முறையான சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஆக்கிரமிப்பில் சிக்கியுள்ள பல ஏரிகளில், அரசியல் கட்சியினர் தலையீடு அதிகமாக உள்ளது. சீரமைப்பு பணி மேற்கொண்டால், உள்ளூர் அரசியல் பிரமுகர்கள் நெருக்கடி கொடுக்கின்றனர். அதனால், சீரமைப்பு பணி மேற்கொள்ள முடியவில்லை.- பொதுப்பணித் துறை அதிகாரி,திருவள்ளூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை