| ADDED : ஜூலை 13, 2024 09:11 PM
திருத்தணி:திருவாலங்காடு ஒன்றியம், நாபளூர் மற்றும் நல்லாட்டூர் ஆகிய ஊராட்சிகளில், 30க்கும் மேற்பட்ட ஒன்றிய மற்றும் ஊராட்சி தார்ச்சாலைகள் உள்ளன. இங்குள்ள பெரும்பாலான தார்ச் சாலைகள் முறையாக பராமரிக்காததால் சேதம் அடைந்தும், குண்டும், குழியுமாக மாறியுள்ளன.மேலும் சாலைகளில் தார் பெயர்ந்து, ஜல்லிகற்கள் வெளியே தெரிகின்றன. இதுதவிர சாலையில் பல இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இரு சக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரத்தில் செல்லும் போது சாலைகளில் மேடு, பள்ளம் தெரியாததால் அடிக்கடி தவறி விழுந்து காயம் அடைகின்றனர்.ஊராட்சியில் பழுதடைந்த சாலைகள் சீரமைக்க வேண்டும் என கிராம பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கிராம சபை கூட்டங்களில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. ஊராட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் சாலைகள் சீரமைப்பதில் காலதாமதம் ஆகிறது என உள்ளாட்சி பிரதிநிதிகள் கூறுகின்றனர். எனவே மாவட்ட கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுத்து, ஊராட்சிகளில் பழுதடைந்த சாலைகள் குறித்து கணக்கெடுத்து சீரமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.