| ADDED : ஜூலை 03, 2024 12:48 AM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த ஆண்டார்குப்பம், பெரவள்ளூர், பெருஞ்சேரி, வெள்ளோடை கிராமங்கள் வழியாக ஆரணி ஆற்றிற்கு மழைநீர் செல்லும் ஓடைகால்வாய் உள்ளது.பல்வேறு பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், இந்த கால்வாய் வழியாக ஆரணி ஆற்றிற்கு தடையில்லாமல் சென்று வந்தது. இந்நிலையில், மேற்கண்ட கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும், புதர்களால் சுருங்கி வருகிறது. மூகாம்பிகை நகர், வெள்ளோடை, அப்துல்கலாம் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கரைகள் இல்லை.இதனால், மழைக்காலங்களில் ஓடைக்கால்வாய் வழியாக ஆரணி ஆற்றிற்கு மழைநீர் செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது.ஒவ்வொரு ஆண்டு மழையின்போது, கால்வாயை ஒட்டியுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் விவசாய நிலங்கள் மழைநீரில் மூழ்கி, பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகின்றன.இது குறித்து குடியிருப்புவாசிகள் கூறியதாவது:கால்வாய் வழியாக மழைநீர் சீராக செல்ல வழியின்றி, பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட மூகாம்பிகை நகர், அப்துல்கலாம் நகர் ஆகிய குடியிருப்பு பகுதிகள் மழைநீரில் மூழ்குகின்றன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கிறது.பொதுப்பணித்துறையினர் மேற்கண்ட கால்வாயை முழுமையாக அளவீடு செய்து, அதிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மழைக்காலத்திற்குள் துார்வாரி, கரைகளை பலப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.