| ADDED : ஜூலை 09, 2024 06:30 AM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த திருப்பாச்சூர் ஊராட்சி, இந்த ஊராட்சிக்குட்பட்ட பழைய திருப்பாச்சூர், திருப்பாச்சூர், பெரிய காலனி, கோட்டை காலனி, தாட்கோ நகர், கொசவன்பாளையம்.கொசவன்பாளையம் காலனி, ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதியில் 1,750க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் நுாறு நாள் வேலை திட்டத்தில் பணி செய்து வருகின்றனர். கடந்த நான்கு மாதங்களாக நுாறு நாள் பணி இல்லாமல் சிரமப்பட்டு வந்துள்ளனர். பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதனால் ஆத்திரமடைந்த பெண் தொழிலாளர்கள் நேற்று ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆனால் சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் யாரும் வரவில்லை. இதையடுத்து தொழிலாளர்கள் சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை திருப்பாச்சூர் பேருந்து நிறுத்தம் அருகே திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருவள்ளூர் நகர மற்றும் மணவாளநகர் இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி ஸ்டாலின், ரவிக்குமார் மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் நடத்திய பேச்சு தோல்வியில் முடிந்தது.இதையடுத்து பூண்டி ஒன்றிய அலுவலர் ஸ்டாலின் வந்து பேச்சு நடத்தினார். அவர்களிடம் மாவட்ட நிர்வாகத்திடம் கலந்தாலோசித்து நுாறு நாள் வேலை வழங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து, பகுதிவாசிகள் கலைந்து சென்றனர். இதனால் சென்னை - திருப்பதி நெடுஞ்சாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மீஞ்சூர்: மீஞ்சூர் ஒன்றியம், வாயலுார் ஊராட்சிக்கு உட்பட்ட ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த, நுாறு நாள் பணியாளர்கள், நேற்று, அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த புதர்களை அகற்றும் பணிகளுக்காக சென்றனர். தனி நபர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்திருப்பதால், சுத்தம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.இதையடுத்து, நுாறுநாள் பணியாளர்கள், அருகில் உள்ள திருவெள்ளவாயல் பஜார் பகுதிக்கு சென்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், 'தங்களுக்கு நுாறு நாட்களுக்கு வேலை வழங்குவது இல்லை. மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை தனிநபர் சிலர் ஆக்கிரமித்து பயிர் செய்து வருகின்றனர். தங்களுக்கு உரிய நாட்கள் வேலை வழங்கவும், அரசு நிலத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் வேண்டும் என வலியுறுத்தினர்.காவல் மற்றும் வருவாய்த்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர். அவர்கள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால், மீஞ்சூர் -வஞ்சிவாக்கம் மாநில நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது.