| ADDED : ஜூலை 19, 2024 02:01 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தின் மேற்கில் பஞ்சாட்சர மலையும், கிழக்கில் பொது குளமும் உள்ளன.பஞ்சாட்சர மலை, சிறந்த நீர்ப்பிடிப்பு பகுதியாக அமைந்துள்ளது. இந்த மலையில் இருந்து வழியும் மழைநீர், கிராமத்தின் வழியாக பாய்ந்து குளத்தை வந்தடைகிறது. ஆனாலும் குளம் இதுநாள் வரை நிரம்பியதே இல்லை. கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கிராமத்து இளைஞர்கள், குளத்தை துார்வாரி, களிமண்ணால் அடித்தளம் அமைத்தனர். அதை தொடர்ந்து ஓரளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. ஆனாலும், குளத்தில் குவியும் குப்பையால் குளத்து நீர், கழிவுநீர் போல் மாறியுள்ளது.குளத்தில் குவியும் குப்பையை அகற்றி, குளத்தை சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர். குளத்திற்கு 100 அடி துாரத்தில் பாயும், ஏரி நீர்வரத்து கால்வாய் தற்போது புதர் மண்டி கழிவுநீர் கால்வாயாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த கால்வாயை சுத்தமாக பராமரித்து, அதிலிருந்து இந்த குளத்திற்கு கூடுதல் மழைநீரை திருப்பி விட பகுதிவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.