| ADDED : ஜூலை 12, 2024 11:29 PM
திருத்தணி:திருத்தணி அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மொத்தம், 1,652 மாணவியர் படித்து வருகின்றனர். இதில், பிளஸ்1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகள் படிக்கும், 400க்கும் மேற்பட்ட மாணவியர் உள்ளனர். இந்நிலையில், அரசு மகளிர் பள்ளியில், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் அதிகளவில் காலியிடமாக உள்ளன. ஆங்கிலம்- 3, தமிழ் -2, தாவரவியல் -1, விலங்கியல்-1 கணிதம்-1, வேதியியல்-1 மற்றும் வணிகவியல்-1 என மொத்தம், 10 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாக உள்ளன.அதே போல் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் பணியிடமும் நீண்ட காலமாக காலியிடமாக உள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையால், மாணவியர்களின் கல்வி கேள்விக்குறியாக உள்ளன. மேற்கண்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால், மாணவர்கள் தாங்களே படித்துக் கொள்ள வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.ஆசிரியர் பற்றாக்குறையால், ஆண்டுதோறும், அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு, ஆண்டு குறைந்து வருவதால், பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அரசு மகளிர் பள்ளியில் சேர்ப்பதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. எனவே மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் கலெக்டர் விரைந்து நடவடிக்கை எடுத்து, காலியாக உள்ள பணியிடங்களுக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் கூறுகையில், 'பள்ளியில் காலியாக உள்ள பணியிடங்கள் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறோம். ஆசிரியர்கள் நியமிப்பது, அரசின் முடிவாகும்' என்றார்.**