| ADDED : ஜூன் 20, 2024 09:15 PM
திருவள்ளூர்:அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்ட, அம்மா உணவகம் மீண்டும் வர பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில், அம்மா உணவகம் செயல்பட்டு வந்தது. மருத்துவமனை விரிவாக்கத்திற்காக, பழைய கட்டடம் இடித்து அகற்றி, புதிய கட்டடம் கட்டும் பணி துவங்கியது. அப்போது, மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வந்த அம்மா உணவகம் கட்டடமும் இடித்து அகற்றப்பட்டது.கட்டுமான பணி நிறைவடைந்ததும், தனி இடம் ஒதுக்கப்படும் என, மருத்துவமனை நிர்வாகம் உறுதி அளித்தது. இந்த நிலையில், மருத்துவமனை கட்டடம், ஆறு அடுக்கில் கட்டப்பட்டு, கடந்த ஒரு ஆண்டுகளுக்கு முன் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏழை, எளியோர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும்போது, குறைந்த விலையில், அம்மா உணவகத்தை பயன்படுத்தி வந்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன் அகற்றப்பட்ட அம்மா உணவகம் மட்டும் இதுவரை இங்கு துவங்கப்படவில்லை.இதனால், ஏழை எளியோர் கூடுதல் விலை கொடுத்து, கடைகளில் உணவு வாங்கி சாப்பிடுகின்றனர். எனவே, நகராட்சி மற்றும் மருத்துவமனை நிர்வாகம், மீண்டும் அம்மா உணவகம் செயல்படுத்த நடவடிக்கை எடுக்க, கோரிக்கை விடுத்துள்ளனர்.