| ADDED : நவ 24, 2025 04:20 AM
திருத்தணி: முருகன் கோவிலில் நேற்று வார விடுமுறை, முகூர்த்த நாள் என்பதால், ஒரே நாளில், 85 திருமணங்கள் நடந்தன. இதனால், பக்தர்கள் நான்கு மணி நேரம் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். திருத்தணி முருகன் கோவிலில் நேற்று அதிகாலை 4:30 மணிக்கு மூலவருக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மூலவருக்கு தங்க வேல், தங்ககிரீடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது. நேற்று வார விடுமுறை மற்றும் முகூர்த்த நாள் என்பதால், திருத்தணி முருகன் மலைக்கோவில் மற்றும் தனியார் மண்டபங்களில் என, ஒரே நாளில் 85 திருமணங்கள் நடந்தன. இதனால், திருமணத்திற்கு வந்த உறவினர்கள் மற்றும் புதுமண தம்பதியர் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவரை தரிசிக்க, மலைக் கோவிலில் குவிந்தனர். இதனால், பொது வழியில் தரிசனத்திற்கு நான்கு மணி நேரமும், 100 ரூபாய் சிறப்பு தரிசனத்திற்கு இரண்டரை மணி நேரமும், நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். நேற்று முருகன் மலைக்கோவிலுக்கு, இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோக்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டன. பக்தர்கள் வசதிக்காக, கோவில் நிர்வாகம் மலைக்கோவிலுக்கு, 10 சிறப்பு பேருந்துகளை இயக்கின. இரவு 7:00 மணிக்கு உற்சவர் முருகர், வள்ளி, தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளி, தேர்வீதியில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.