UPDATED : டிச 25, 2025 08:07 AM | ADDED : டிச 25, 2025 06:57 AM
ஊத்துக்கோட்டை: மின்மாற்றியில் உள்ள கம்பங்களின் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரியும் நிலையில் உள்ள மின்மாற்றியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. ஊத்துக்கோட்டையில் இருந்து கலைஞர் நகர், சிட்ரப்பாக்கம் பகுதிகளுக்கு செல்லும் சாலையில் மின்மாற்றி உள்ளது. இதன் மூலம் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகள் பயனடைகின்றன. இந்த மின்மாற்றி அமைத்து, 20 ஆண்டுகளுக்கு மேலான நிலையில், இதன் துாண்களில் கான்கிரீட் பூச்சுகள் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால், கம்பத்தின் உறுதித்தன்மை பாதிக்கும் நிலை உள்ளது. குடியிருப்பு மற்றும் சாலையை ஒட்டி மின்மாற்றி அமைந்துள்ளதால், அசம்பாவிதம் ஏற்பட்டால் உயிர்ச்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. சமீபத்தில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்த போது, அப்பகுதி மக்கள் சேதமடைந்துள்ள மின்மாற்றி கம்பங்களை மாற்றி அமைக்க வேண்டும் என, மனு அளித்தனர். ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சேதமடைந்த மின்மாற்றி கம்பங்களை அகற்றிவிட்டு, புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.