| ADDED : மார் 14, 2024 09:56 PM
பொன்னேரி:பொன்னேரி அடுத்த திருப்பாலைவனம் பகுதியில், காவலர் குடியிருப்பு அமைந்து உள்ளது. இங்கு, தரை, முதல் மற்றும் இரண்டாம் தளங்கள் என, மூன்று கட்டடங்களில், 12 குடியிருப்புகள் உள்ளன. மேலும், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., ஆகியோருக்கு தனித்தனி குடியிருப்புகளும் உள்ளன.இதில் பாதுகாப்பு பணிகளுக்காக அவ்வப்போது வந்து செல்லும் காவலர்கள் மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர். பெரும்பாலான நேரங்களில் குடியிருப்புகள் பயன்பாடு இன்றி உள்ளன. இவை கட்டப்பட்டு, 15ஆண்டுகள் ஆன நிலையில், தொடர் பராமரிப்பு இல்லாததால் கட்டடம் பலவீனமாக வருகிறது.குடியிருப்புகளில் உள்ள கதவு, ஜன்னல்கள் சேதம் அடைந்தும், கிரில் கதவுகள் துருப்பிடித்தும் உள்ளன. சுவர்களில் செடிகள் வளர்ந்தும் கட்டடத்தின் உறுதியை குறைத்து வருகிறது.மின்சாதன பொருட்கள், குடிநீர் இணைப்புகளும் சேதம் அடைந்து பராமரிக்கப்படாமல் உள்ளன. தற்போது திருப்பாலைவனம் காவல் நிலையம் சென்னை ஆவடி கமிஷனரகத்துடன் இணைக்கப்பட்ட நிலையில், அதிகப்படியான போலீசார் பணியமர்த்தப்பட்டு உள்ளனர்.வெளியிடங்களில் வந்து தங்கி பணிபுரியும் நிலையில், குடியிருப்புகள் பராமரிப்பு இன்றி கிடப்பதால், அவற்றை பயன்படுத்துவற்கு தயக்கம் காட்டுகின்றனர்.போலீசாருக்கு பயன்படும் வகையில், மேற்கண்ட காவலர் குடியிருப்புகளை கட்டடத்தின் உறுதித்தன்மையை ஆய்வு செய்து, புதுப்பிக்க அல்லது புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.