| ADDED : நவ 24, 2025 04:20 AM
திருத்தணி: கார்த்திகேயபுரம் ஊராட்சியில், 40 லட்சம் ரூபாயில் ஏற்படுத்தப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் பராமரிப்பின்றி வீணாகி வருகிறது. திருத்தணி ஒன்றியம் கார்த்திகேயபுரம் ஊராட்சியில், கடந்த 2016 -17ம் ஆண்டு ஊரக வளர்ச்சி துறையின் சார்பில், 30 லட்சம் ரூபாய் மதிப்பில் நவீன பூங்காவும், 10 லட்சம் ரூபாயில் இளைஞர்கள் உடற்பயிற்சி செய்யும் வகையில் இயந்திரங்களுடன் அறை ஏற்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் பூங்காவிற்கு குழந்தைகள், முதியவர்கள் ஆர்வத்துடன் வந்து சென்றனர். அதேபோல், தினமும் காலை நேரத்தில், 20க்கும் மேற்பட்ட இளைஞர்கள் உடற்பயிற்சி செய்து வந்தனர். கடந்த 2021ம் ஆண்டு வரை, ஊராட்சி நிர்வாகம் முறையாக பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை பராமரித்து வந்தது. அதன்பின், பூங்கா, உடற்பயிற்சி கூடத்தை பராமரிக்காததால், உடற்பயிற்சி கருவிகள் மழையில் நனைந்து வீணானது.மேலும், பூங்காவில் உள்ள விளையாட்டு கருவிகள் சேதமடைந்துள்ளன. பூங்காவை சுற்றிலும் முட்செடிகள் வளர்ந்துள்ளன. இதனால், மக்கள் வரிப்பணம் வீணாகி வருகிறது. தற்போது பூங்காவில், இரவு நேரத்தில் சமூக விரோத செயல்கள் நடந்து வருகின்றன. எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் உடனே நடவடிக்கை எடுத்து, பூங்காவை பராமரிக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.