UPDATED : ஜன 17, 2024 07:46 AM | ADDED : ஜன 16, 2024 11:39 PM
மீஞ்சூர், மீஞ்சூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் உவர்ப்பாக இருக்கிறது. நாளுக்கு நாள் நிலத்தடி நீரின் உவர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், இங்குள்ள நீர்நிலைகளை பராமரிப்பதில் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.அரியன்வாயல் பகுதியில் உள்ள அம்மாசெட்டிக்குளம், ராமரெட்டிப்பாளையம் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் குளம், வரதாஜபெருமாள் கோவில் குளம் ஆகியவை பராமரிப்பு இன்றி உள்ளன.குளங்களில் ஆகாயத்தாமரை சூழ்ந்தும், செடி கொடிகள் பரவியும் இருப்பதுடன், குடியிருப்புவாசிகளின் குப்பை தொட்டியாகவும் இவை மாறியுள்ளது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மீஞ்சூர் பேரூராட்சியில் உள்ள 7,554 குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள வன்னிப்பாக்கம் கிராமத்தில், கொசஸ்தலை ஆற்றில் ஆழ்துளை கிணறுகள் அமைத்து தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.எட்டு கி.மீ., தொலைவில் இருந்து தண்ணீர் கொண்டு வரும் நிலையில், குழாய் உடைப்பு, மோட்டார் பழுது உள்ளிட்டவைகளால் சீரான வினியோகம் இருப்பதில்லை. டிராக்டர்களில் கொண்டு விற்பனை செய்யப்படும் தண்ணீரை வாங்கும் நிலை உள்ளது. மீஞ்சூர் பகுதியில் உள்ள குளங்களை உரிய முறையில் பராமரித்தால், அவற்றில் தேங்கும் தண்ணீர் பொதுமக்களின் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்த முடியும். மேலும், தண்ணீர் தட்டுப்பாடும் குறையும். எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.