| ADDED : நவ 24, 2025 04:21 AM
கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி தாமரை ஏரியை அழிவில் இருந்து மீட்க வலியுறுத்தி, பொதுமக்கள் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அரசு தவறினால், பொது மக்கள் சார்பில் நிதி வசூலித்து, ஏரியை மீட்டெடுக்க இருப்பதாக தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டியின் முக்கிய நீராதாரமான தாமரை ஏரி, 48 ஏக்கர் பரப்பளவு உடையது. இந்த ஏரியை நீர்வளத் துறையினர் பராமரித்து வருகின்றனர். கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாக தொழிற்சாலைகளின் கழிவுநீர் மற்றும் டேங்கர் லாரிகளின் கழிவுநீர் கலந்து ஏரி முழுதும் மாசடைந்தது. இதனால், கும்மிடிப்பூண்டியின் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டு, உலோகங்கள் கருமை நிறத்தில் மாறியது. அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், ஏரியை அழிவில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர். கழிவுநீர் வரத்தை தடுத்து நிறுத்திய அரசு, மக்களை சந்தித்து குறைகளை கேட்கவில்லை. ஏரியை மீட்டெடுக்கும் முயற்சியை அரசு மேற்கொள்ளவில்லை என, அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன்வைத்தனர். நேற்று கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், மனித சங்கலி போராட்டம் நடத்த மக்கள் திட்டமிட்டனர். போலீசார் அனுமதி மறுத்ததால், ரெட்டம்பேடு சாலை சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில், 250க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். 'உடனே தாமரை ஏரியை மீட்டெடுக்க அரசு தவறினால், பொதுமக்கள் சார்பில் நிதி வசூலித்து, ஏரியை மீட்டெடுப்போம்' என, போராட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர். கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில், ஒன்றரை மணி நேரம் நீடித்த கண்டன ஆர்ப்பாட்டத்தால் பெரும் பரபரப்பு நிலவியது.