பொன்னேரி: தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலை சேதமடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, மழைநீர் தேங்கியிருப்பதால், வாகன ஓட்டிகள் தடுமாற்றத்துடன் சென்று வருகின்றனர். பொன்னேரி அடுத்த தடப்பெரும்பாக்கம் - கிருஷ்ணாபுரம் சாலையில், தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள், பள்ளி வாகனங்கள் சென்று வருகின்றன. தச்சூரில் இருந்து பொன்னேரி வழியாக மீஞ்சூர் செல்லும் வாகனங்களும், அதே வழித்தடத்தில் திரும்பும் வாகனங்களும், பொன்னேரிக்கு செல்வதை தவிர்க்க இச்சாலையை பயன்படுத்துகின்றன. இந்த சாலை சேதமடைந்து, ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டு, போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. பள்ளங்களில் மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள் தடுமாற்றம் அடைந்து வருகின்றனர். வேகத்தடைகளின் முன்னும், பின்னும் பள்ளங்கள் ஏற்பட்டு இருப்பதால், அவற்றில் வாகனங்கள் சிக்கி வருகின்றனர். இதனால், அவ்வப்போது சிறு சிறு விபத்துகள் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் காயம் அடைந்து வருகின்றனர். மேலும், பள்ளங்களை தவிர்க்க வலது, இடது என, மாறி மாறி வாகனங்கள் செல்லும் போது, எதிரே வரும் வாகனங்களும் தடுமாற்றம் அடைகின்றன. இதனால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சாலையில் உள்ள பள்ளங்களை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறையினர் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.