சென்னை:கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 'ஏசி'யுடன் கூடிய கட்டண வார்டு திறக்கப்பட்டுள்ளது.சென்னை, கிண்டி அரசு பல்நோக்கு மருத்துவமனையில், 30.5 கோடி ரூபாய் மதிப்பில், 'ஏசி'யுடன் கூடிய கட்டண வார்டு, 50 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவு, 10 அறுவை சிகிச்சை அரங்குகளை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று திறந்து வைத்தார்.பின், அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:மருத்துவமனை கட்டட பணிகளுக்கு, 380 கோடி ரூபாய் செலவு செய்திருந்தாலும், அதிநவீன தொழில்நுட்ப உபகரணங்களுக்கு இதுவரை, 452 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இதயம், சிறுநீரகவியல் உள்ளிட்ட 19 துறைகள் இயங்கி வருவதுடன், 20 அதிநவீன டயாலிசிஸ் கருவிகள், 4,000 லிட்டர் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் உள்ளன.இம்மருத்துவமனையில், 1.05 லட்சம் பேர் புறநோயாளிகளாகவும், 20,021 பேர் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும், 792 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டிலேயே, மருத்துவமனை துவக்கப்பட்ட ஆறு மாதத்தில், அதிக அறுவை சிகிச்சைகள் இங்கு மேற்கொள்ளப்பட்டு உள்ளன.அத்துடன், 'டபுள் பலுான் எண்டோஸ்கோப்பி, ஆட்டோ எம்.ஆர்.ஐ.,' போன்ற அதிநவீன வசதிகள் உள்ளன. 6.74 கோடி ரூபாய் மதிப்பில், அதிநவீன இதய 'கேத்லேப்' ஆய்வகமும் பயன்பாட்டில் உள்ளது.தற்போது 1,200, 2,000, 3,000 ரூபாய் என்ற கட்டணத்தில், தனியறையுடன் கூடிய கட்டண வார்டு துவக்கப்பட்டு உள்ளது.இந்த மருத்துவமனைக்கு சென்னை மட்டுமின்றி, கடலுார், விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், மக்கள் வருகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.