| ADDED : நவ 24, 2025 04:11 AM
திருத்தணி: திருத்தணி ஆறுமுக சுவாமி கோவில் தெருவில், முருகன் கோவிலின் உபகோவிலான கோட்டா ஆறுமுக சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் வளாகத்தில், விஜயராகவ பெருமாள் கோவில், விஜயலட்சுமி தாயார் கோவில், வள்ளி யானை மண்டபம் மற்றும் நாதஸ்வரம், தவில் பயிற்சி பள்ளி உள்ளன. கோட்டா ஆறுமுக சுவாமி கோவிலுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். விசேஷ நாட்களில் 1,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். கடந்த 15 ஆண்டுகளாக மூன்று கோவில்களிலும் உண்டியல் வைக்காமல், கோவில் நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது. பக்தர்கள் மூலவரை தரிசித்த பின், தங்களது வேண்டுதல்களை செலுத்துவதற்கு உண்டியல் இல்லாததால் ஏமாற்றம் அடைகின்றனர். சில பக்தர்கள் நேர்த்திக்கடனை செலுத்த முடியாமல் மனவேதனையுடன் செல்கின்றனர். ஆறுமுக சுவாமி கோவிலில் உண்டியல் வசதி ஏற்படுத்தி தரவேண்டும் என, பல ஆண்டுகளாக பக்தர்கள் கோரிக்கை விடுத்தும், கோவில் நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளது. எனவே, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் மற்றும் ஹிந்து அறநிலையத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, மூன்று கோவில்களிலும் உண்டியல் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.