உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / 40 சவரன் நகை, 22 லட்சம் ரொக்கம் கொள்ளை

40 சவரன் நகை, 22 லட்சம் ரொக்கம் கொள்ளை

பூந்தமல்லி : கரையான்சாவடியில், காம்பவுண்டு சுவர் எகிறி குதித்து, கிரில் கேட்டை உடைத்து வீட்டிற்குள் புகுந்து, 40 சவரன் நகைகள், 22 லட்ச ரூபாயை கொள்ளையடித்து தப்பிய கொள்ளையர்களை, போலீசார் தேடி வருகின்றனர். பூந்தமல்லி கரையான்சாவடி, பொன்னியம்மன் நகர், நான்காவது தெருவைச் சேர்ந்தவர் சேவியர்,60. இவரது மனைவி சாந்தகுமாரி, 55. இவர்களுக்கு, சொந்தமாக காஞ்சிபுரத்தில் இருந்த இடத்தை விற்றதில், ஒரு கோடி ரூபாய் கிடைத்தது. இந்த பணத்தை வைத்து, சென்னீர்குப்பம் இ.பி., அலுவலகம் எதிரே புதிதாக அடுக்கு மாடி வீடு ஒன்றை கட்டி வருகின்றனர். அதற்காக, வீட்டில் 22 லட்ச ரூபாயும், 40 சவரன் நகைகளை வைத்திருந்து விட்டு, ஏலகிரிக்கு சேவியரும், சாந்தகுமாரியும் சுற்றுலா சென்றிருந்தனர். வீட்டில் மகன் ஜான்சிம்சன், 30, மட்டுமே அடுக்குமாடி வீடு கட்டுமானப் பணியை கவனித்து வந்தார். நேற்று முன்தினம்மதியம் சாப்பிட்டுவிட்டு வீட்டை பூட்டி, சாவியை பக்கத்து வீட்டில் வசிக்கும் லட்சுமி என்பவரிடம் ஜான்சிம்சன் கொடுத்து விட்டு, மீண்டும் வெளியே சென்று விட்டார். சுற்றுலா சென்ற சேவியரும், சாந்தகுமாரியும் இரவு வீடு திரும்பினர்.அப்போது, வீட்டு பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்தன. பீரோவில் வைத்திருந்த 40 சவரன் நகைகள், கட்டுமான பணிக்காக வைத்திருந்த 22 லட்ச ரூபாயும் திருடு போயிருந்தது தெரியவந்தது. கொள்ளையர்கள் காம்பவுண்டு சுவரை தாண்டி, மாடியில் உள்ள கிரில் கேட்டை உடைத்து கொள்ளையடித்தது தெரியவந்தது. பூந்தமல்லி குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ஆதிமூலம், சந்தேகத்தின்படி, ஜான்சிம்சனிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

அம்மன் கோவிலில் கொள்ளை : வேளச்சேரி, திரவுபதியம்மன் கோவில் முதல் தெருவில், அகிலாண்டேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோவில் உண்டியல், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை, திறக்கப்படும். அப்போது, 30 ஆயிரம் ரூபாய் வரை காணிக்கை சேகரமாகும். இக்கோவில் உண்டியல், இரு மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டது. ஆடி மாதத்தை முன்னிட்டு, கடந்த ஒரு மாதமாக, ஏராளமான பக்தர்கள் வந்து அம்மனுக்கு காணிக்கை செலுத்தினர். சிலர், வேண்டுதலை நிறைவேற்ற தங்க, வெள்ளிப் பொருட்களை காணிக்கையாக செலுத்தியுள்ளனர். ஆடி திருவிழாவில் அம்மனுக்கு கிடைத்த பொருட்கள் ஏலம் விட்டு, அதில் வந்த தொகையையும் கோவில் நிர்வாகிகள் உண்டியலில் செலுத்தினர். நேற்று அதிகாலை, கோவில் பொறுப்பாளர் பொன்னுசாமி, வழக்கம் போல கதவை திறந்து உள்ளே சென்ற போது, உண்டியல் பூட்டு உடைக்கப்பட்டு, அதிலிருந்த ரொக்கம், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்த தங்க, வெள்ளிப் பொருட்கள் ஆகியவை கொள்ளை போனது தெரியவந்தது. கோவில் நிர்வாகி மோகன் கொடுத்த புகாரின்படி, வேளச்சேரி போலீசார் விசாரித்து வருகின்றனர். உண்டியலின் வெளி பூட்டை உடைத்து, உள்ளேயிருந்த லாக்கரை சாவி கொண்டு திறந்து, கொள்ளை அடிக்கப்பட்டுள்ளதால், கோவிலுக்கு நன்கு அறிமுகமானவர்கள் கொள்ளையடித்துச் சென்றிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி