| ADDED : நவ 18, 2025 03:29 AM
திருத்தணி: சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை சோமவார பிரதோஷம் ஒட்டி பெண்கள் விளக்கு ஏற்றி வழிப்பட்டனர். திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள சதாசிவ லிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று கார்த்திகை மாதம் முதல் சோமவாரம் மற்றும் பிரதோஷ விழாவை ஒட்டி, மூலவருக்கு காலை, 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மாலை, 5:00 மணிக்கு பிரதோஷ விழாவை ஒட்டி மூலவருக்கு பால், பன்னீர், பஞ்சாமிர்தம் போன்ற அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பெண் பக்தர்கள் கோவில் வளாகத்தில் நெய்தீபம் மற்றும் நல்லெண்ணையால் தீபம் ஏற்றி வழிப்பட்டனர். சுருட்டப்பள்ளி சர்வமங்களா சமேத பள்ளிகொண்டீஸ்வரர் கோவிலில், நேற்று பிரதோஷ விழாவை ஒட்டி, மூலவர் வால்மிகீஸ்வரர் மற்றும் நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில், கோவிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஊத்துக்கோட்டை ஆனந்தவல்லி சமேத திருநீலகண்டேஸ்வரர் கோவில், வடதில்லை பாபஹரேஸ்வரர் கோவில், தாராட்சி பரதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது.