உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவாரூர் / காவலரை வெட்டி தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

காவலரை வெட்டி தப்ப முயன்ற ரவுடியை சுட்டுப்பிடித்த போலீசார்

திருவாரூர்:நீடாமங்கலம் அருகே, காவலரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோட முயன்ற ரவுடியின் காலில், போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்.திருவாரூர் மாவட்டம், களப்பாலைச் சேர்ந்த பாஸ்கரன் 2013ல் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், நடுவக்களப்பாலைச் சேர்ந்த மாரிமுத்து, 54, உட்பட 39 பேர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன் முன்விரோதம் காரணமாக, கடந்த 9ம்தேதி, நடுவக்களப்பாலில் மாரிமுத்து வெட்டிக்கொல்லப்பட்டார்.இக்கொலை வழக்கில் தேடப்பட்ட, பாஸ்கரன் உறவினர் ராகுல், 24, உட்பட, ஆறு பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் நீடாமங்கலம் அடுத்த, பூவனுாரைச் சேர்ந்த, மனோஜ், 25, என்பவரை போலீசார் தேடி வந்தனர். இவர், பூவனுார் ராஜ்குமார் என்பவரின் நெருங்கிய கூட்டாளி. கடந்த 2023ல் ராஜ்குமார், கொலை செய்யப்பட்டார். இதற்கு பழித்தீர்க்கும் வகையில், ஸ்டாலின் பாரதி என்பவரை கொலை செய்ய மனோஜ் திட்டம் தீட்டியதும் போலீசாருக்கு தெரியவந்தது.இந்நிலையில், ராஜ்குமாரின் சமாதி அருகே நேற்று காலை மனோஜ் உட்பட ஆறு பேர் கூடியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற, நீடாமங்கலம் எஸ்.ஐ., சந்தோஷ்குமார் மற்றும் போலீசார், ஐந்து பேரை கைது செய்தனர். அப்போது மனோஜ் தப்பியோடினார். நகர் தெருவில் அவர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.அப்போது, அவரை பிடிக்கச் சென்ற காவலர் விக்னேஷ் என்பவரை அரிவாளால் தாக்கிவிட்டு, மனோஜ் தப்பிக்க முயன்றார். தற்காப்புக்காக, எஸ்.ஐ., சந்தோஷ்குமார், துப்பாக்கியால் மனோஜ் காலில் சுட்டுப்பிடித்தார்.படுகாயமடைந்த மனோஜ், திருவாரூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். காயமடைந்த காவலர் விக்னேஷ் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுஉள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !