| ADDED : ஆக 07, 2024 10:01 PM
துாத்துக்குடி:துாத்துக்குடி மாவட்டம், தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த அந்தோணி மகாராஜா, 45, என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் அவர் உட்பட 12 மீனவர்கள், ஜூலை 21ம் தேதியும், மைக்கேல் தேன் தெனிலா, 43, என்பவருக்கு சொந்தமான படகில் 10 மீனவர்கள், ஜூலை 23ம் தேதியும் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.கடந்த 5ம் தேதி அவர்கள் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் இரு படகுகளிலும் இருந்த 22 பேரையும் கைது செய்து படகுகளையும் பறிமுதல் செய்தனர்.கைதான 22 மீனவர்களும் மருத்துவ பரிசோதனைக்கு பின், கல்பிட்டி சுற்றுலா நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி இஓனா விமலரத்ன, 22 மீனவர்களையும், வரும் 20ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.இதையடுத்து, 22 மீனவர்களும் வாரியபொல சிறையில் அடைக்கப்பட்டனர்.
துாத்துக்குடி மீனவர்களை விரைந்து மீட்கணும்!
இயற்கைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மீன்பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர் துாத்துக்குடி தருவைகுளம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள். அவர்களை கைது செய்ததோடு, இரு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசும், மாநில அரசும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.பிடிபட்ட இரு விசைப்படகுகளும் இந்திய கடல் எல்லைக்குள் தான் இருந்துள்ளன. இலங்கை கடற்படையினர் தான் அத்துமீறி நுழைந்து கைது செய்துள்ளனர். தடை செய்யப்பட்ட வலையை மீனவர்கள் பயன்படுத்தவில்லை.இவ்வாறு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.