| ADDED : ஜூன் 21, 2024 02:07 AM
துாத்துக்குடி;பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த எம்.வி.,ஸ்டார் லூரா என்ற கப்பல், 22 மாலுமிகளுடன் கடந்த சில நாட்களுக்கு முன் சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டது. தொடர்ந்து, இந்தோனேசியாவில் இருந்து 70 ஆயிரம் டன் நிலக்கரி ஏற்றிக் கொண்டு அந்த கப்பல் ஜூன் 17ம் தேதி துாத்துக்குடி துறைமுக நுழைவுப் பகுதிக்கு வந்தது.அனுமதிக்காக துாத்துக்குடி வ.உ.சி., துறைமுகத்தில் இருந்து 5 கடல் மைல் தொலைவில் அந்த கப்பல் காத்திருந்த நிலையில், அதில் மாலுமி ஒருவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் பரவியது. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அந்த கப்பல் 9வது பெர்த் பகுதிக்கு கொண்டு வரப்பட்டது.இதுதொடர்பாக, தருவைக்குளம் மரைன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். மேலும், கப்பலுக்குள் சென்ற போலீசார், துாக்கில் தொங்கிய மாலுமி யின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த மாலுமி கிம் ஜோரன் சினாம்பன், 31, என தெரிந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேதப் பரிசோதனை அறிக்கைக்குப் பிறகே, மாலுமி கிம் ஜோரன் சினாம்பன் தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்யப்பட்டாரா என்ற விபரம் தெரியவரும் என போலீசார் கூறினர்.