கோவில்பட்டி:மத்திய ரிசர்வ் போலீசில் வேலைவாங்கித்தருவதாக கூறி கூறி 41 பேரிடம் 1.75 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா ஜமீன் தேவர்குளம் நடுத்தெருவைச் சேர்ந்தவர் சஞ்சீவிப்பெருமாள், 55; விவசாயி.இவரது மகன் மகாராஜா, 25; என்பவருக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் வேலைக்கு முயற்சி செய்தார். கணேசன் என்பவர் மூலம் சிவகாசி அருகேயுள்ள மேலமறைன்நாடு கிராமத்திற்கு சென்றனர்.அங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ஒய்வு பெற்ற ஏ.சி.பி., குருசாமி சந்தித்துள்ளார். அப்போது சஞ்சீவிப்பெருமாளின் மகன் மகாராஜாவுக்கு சி.ஆர்.பி.எப்.,பில் வேலை வாங்கித் தருவதாகவும், ரூ. 4 லட்சம் ஆகும் என்று கூறி, முதல் கட்டமாக ஒரு லட்சம் ரூபாய் கேட்டுள்ளார். இதையடுத்து, ஒரு லட்சம் ரூபாயை குருசாமியிடம் கொடுத்துவிட்டார். போலி ஆணை
பெங்களூர் சி.ஐ.டி.,யில் சேர்வதற்கான பணி நியமன ஆணையை மகாராஜாவுக்கு வழங்கி உள்ளார். இதையடுத்து மகனை அழைத்துக் கொண்டு, பெங்களூருக்கு சஞ்சீவிப்பெருமாள் சென்றார். அங்கு அதிகாரிகளிடம் பணி நியமன ஆணையை காட்டியுள்ளார்.அவர்கள் போலி பணி நியமன ஆணை என கூறி அவர்களை அங்கிருந்து விரட்டினர். இதுபற்றி குருசாமியிடம் கேட்ட போது, தவறு நடந்துள்ளதாக கூறி சென்னை ஆவடியில் உள்ள பயிற்சி மையத்துக்கு பணி நியமன ஆணை கொடுத்திருக்கிறார். இதையும் உண்மை என்று மகனுடன் மீண்டும் சென்னை ஆவடி சென்டருக்கு சென்றார். அங்குள்ள அதிகாரிகள் பணி நியமன ஆணை போலியானது என்றுகூறி, போலீசில் புகார் செய்யுங்கள் என்று அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து, கோவில்பட்டி போலீஸ் டி.எஸ்.பி.,யிடம் சஞ்சீவிப்பெருமாள், கழுகுமலை அருகே கூலைதேவன்பட்டியைச் சேர்ந்த முனியாண்டி மற்றும் 2 பெண்கள் மனு அளித்தனர்.இதுகுறித்து குருசாமியின் உறவினரான கணேசன் கூறுகையில், 'நான் கட்டட தொழிலாளி. குருசாமியின் வீட்டுக்கு வேலைக்கு சென்ற நேரத்தில் வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறினார்கள். 'அதை நம்பி, 21 பேரை அவரிடம் அறிமுகப்படுத்தினேன். பணத்தை வாங்கிக் கொண்டு, போலி பணி நியமன ஆணை வழங்கி ஏமாற்றி விட்டார்கள். 41 பேரிடம் ரூ. 1.75 கோடியை குருசாமி மற்றும் அவரது மகன்கள் ஏமாற்றி இருக்கிறார்கள்'. என்றார்.