நர்சிங் கல்லுாரி மாணவி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு
துாத்துக்குடி: நர்சிங் கல்லுாரி மாணவி ஒருவர் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார். துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி மந்திதோப்பு கணேஷ் நகரை சேர்ந்த சங்கர் மகள் ரம்யா, 18. மதுரையில் அரசு நர்சிங் கல்லுாரியில் முதலாமாண்டு படித்து வந்தார். விடுமுறைக்காக ஊருக்கு வந்த ரம்யா, நேற்று வெளியே சென்றுள்ளார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே, இனாம்மணியாச்சி கிருஷ்ணாநகர் ரயில்வே சுரங்கபாலத்தின் அருகே தண்டவாளத்தில் பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, இறந்து கிடந்தது ரம்யா என தெரிந்தது. இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.