திருப்பூர்;தாராபுரத்தில் யானை தந்தம், மான் கொம்பு ஆகியவற்றை விற்பனை செய்ய கடத்தி சென்ற, நான்கு பேரை காங்கயம் வனத்துறையினர் கைது செய்தனர்.திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் சிலர் யானை தந்தம், மான் கொம்பு ஆகியவற்றை கடத்தி வந்து விற்பனை செய்ய உள்ளதாக காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனால், காங்கயம் வனச்சரகர் மோனிகா தலைமையிலான குழுவினர் தாராபுரத்தில் ரோந்து மேற்கொண்டு கண்காணித்தனர்.அதில், உடுமலை ரோட்டில் சந்தேகப்படும் விதமான, நான்கு பேரை பிடித்தனர். விசாரணையில், அலங்கியத்தை சேர்ந்த ரமேஷ், 52, பழநி, குதிரையாறு டேமை சேர்ந்த சுப்ரமணி, 60, தேனரசன், 35 மற்றும் பாப்பம்பட்டியை சேர்ந்த செல்வராஜ், 50 என தெரிய வந்தது. இக்கும்பல், இரண்டு யானை தந்தங்களை விற்க திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. நான்கு பேரையும் காங்கயம் வனத்துறையினர் கைது செய்தனர்.வனத்துறையினர் கூறுகையில், 'கைது செய்யப்பட்டுள்ள, நான்கு பேரும் மீன்பிடிக்கும் வகையில் பழக்கம் ஏற்பட்டது. சமீபத்தில் தேனரசன் குதிரையாறு டேமில் மீன் பிடிக்கும் போது, மீன் வலையில், இரண்டு யானை தந்தம் சிக்கியது. இதை விற்க திட்டமிட்டு, தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். அலங்கியத்தில் உள்ள ரமேஷின் வீட்டில் வைத்திருந்துள்ளனர். இரண்டு யானை தந்தங்களை பறிமுதல் செய்த போது, வீட்டில் இருந்த, இரண்டு மான் கொம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டது,'' என்றனர்.