- நமது நிருபர் -திருப்பூர் மாவட்டத்தில் குற்றங்களை தடுக்கும் வகையில், ரவுடி பட்டியல் தயார் செய்யப்பட்டு, அதில் இடம்பெற்றுள்ள, 570 பேரை போலீசார் கண்காணித்து வருகின்றனர். 'அடங்கியிருக்க வேண்டும்; இல்லாவிட்டால், அடக்கப்படுவீர்கள்; சிறையில் அடைக்கப்படுவீர்கள்' என்று ரவுடிகள் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலையை தொடர்ந்து, ரவுடிகள் மற்றும் கூலிப்படையினரை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கும் நடவடிக்கை தீவிரமடைந்துள்ளது.போலீஸ் ஸ்டேஷன்களில் உள்ள சரித்திர பதிவேடுகளில், இடம் பெற்றுள்ள ரவுடிகளின் தற்போதைய நிலை, எங்கு உள்ளனர் உள்ளிட்ட விபரங்கள் அடங்கிய பட்டியல் தயார் செய்து கண்காணிக்க, டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டத்தில் மாநகரம் மற்றும் மாவட்ட போலீசார், கடந்த சில நாட்களாக ரவுடிகள் விபரங்களுடன் பட்டியலை தயார் செய்துள்ளனர்.இரு கொலைகளுக்கு மேல், தொடர்ந்து பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டு 'தாதா'க்கள் போல செயல்படும் ரவுடிகள் 'ஏ - பிளஸ்' பிரிவிலும், அவர்களுக்கு கீழே உள்ள ரவுடி கும்பலுக்கு தலைமை தாங்கும் ரவுடிகள் 'ஏ' பிரிவிலும் இடம் பெற்றுள்ளனர்.சிறிய குற்றங்களில் ஈடுபடும் ரவுடிகள் 'பி' மற்றும் 'சி' பிரிவு என வகைப்படுத்தப்பட்டு தயார் செய்தனர். மாநகரில், 225; புறநகரில், 345
மாநகரில், 'ஏ பிளஸ்' பிரிவில், 2 பேரும், 'ஏ' பிரிவில், 8 பேரும் என, பத்து பேர் முக்கியமான ரவுடிகள், 'பி' பிரிவில், 9 பேர் மற்றும் 'சி' பிரிவில், 206 பேர் என மொத்தம், 225 பேர் அடையாளப்படுத்தப்பட்டு பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.புறநகரில், 'ஏ பிளஸ்' பிரிவில் ஒருவர், 'ஏ' பிரிவில், நான்கு பேர் மற்றும் 'சி' பிரிவில், 340 பேர் என மொத்தம், 345 பேர் இடம் பெற்றுள்ளனர். மாநகர் மற்றும் புறநகர் என, மாவட்டம் முழுவதும், 570 ரவுடிகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.சிறையில் இருந்து வெளியே வந்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தும் வகையில் நடக்கும் ரவுடிகளை, 110 பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.ரவுடிகளை கமிஷனர், சப்-கலெக்டர், ஆர்.டி.ஓ., முன் ஆஜர்படுத்தப்பட்டும்; கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தும் வருகின்றனர்.'பெட்டிப்பாம்பாய் அடங்கியிருக்க வேண்டும்; இல்லாவிட்டால், அடக்கப்படுவீர்கள்' என்று ரவுடிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். எஸ்.ஐ., தலைமையில் தனிப்படை
போலீசார் கூறுகையில், 'மாவட்டம் முழுவதும் ரவுடிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ள, 570 பேரின் தற்போதைய நிலை குறித்து தெரிந்து, அதற்கு தகுந்தாற்போல் போலீசார் கண்காணித்து வருகின்றனர். 'ஏ பிளஸ்' மற்றும் 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ள முக்கிய ரவுடிகளை எஸ்.ஐ., தலைமையிலான தனிப்படையினர் தொடர்ந்து கண்காணித்து கைது நடவடிக்கையை மேற்கொள்கின்றனர்,' என்றனர்.