உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெங்களூரு பறந்த ஓட்டு மெஷின்கள்

பெங்களூரு பறந்த ஓட்டு மெஷின்கள்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்திலிருந்து, 213 பழுதடைந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.லோக்சபா தேர்தல் முடிந்ததால், அனைத்து மாவட்டங்களிலும் பழுதடைந்த நிலையில் உள்ள மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை, சரி செய்வதற்காக, பெங்களூரு 'பெல்' நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் வடக்கு, தெற்கு, பல்லடம், அவிநாசி, காங்கயம், தாராபுரம், உடுமலை, மடத்துக்குளம் ஆகிய எட்டு சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஓட்டுப்பதிவுக்கு முந்தைய சரிபார்ப்பில் பழுது கண்டறியப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த சட்டசபை தொகுதி ஸ்ட்ராங் ரூம்களில் வைக்கப்பட்டிருந்தன.

பழுதான இயந்திரங்கள்

மெஷின்கள், கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள மாவட்ட ஸ்ட்ராங் ரூமுக்கு கொண்டு வரப்பட்டன. 80 பேலட் யூனிட்; 32 கன்ட்ரோல் யூனிட்; 101 வி.வி.பேட் என, மாவட்டத்தில் மொத்தம் 213 பழுதடைந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் இருந்தன. மாவட்ட தேர்தல்பிரிவு சார்பில் பழுதடைந்த மெஷின்கள், வாகனத்தில் ஏற்றப்பட்டு, நேற்று இரவு பெங்களூருவுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.மாவட்ட தேர்தல் பிரிவினர் கூறுகையில், ''திருப்பூர் மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு முந்தைய சரிபார்ப்பில் பழுது கண்டறியப்பட்ட, 213 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், பெங்களூரு பெல் நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அங்கு, இயந்திரங்களில் பழுது கண்டறியப்பட்டு சரி செய்யப்படும்.ஓட்டுப்பதிவின்போது பாதியில் மக்கர் செய்த இயந்திரங்கள் அந்தந்த சட்டசபை தொகுதி ஸ்ட்ராங் ரூமிலேயே வைக்கப்பட்டுள்ளன. அந்த இயந்திரங்களில், பதிவாகி உள்ள ஓட்டுப்பதிவு விவரங்கள், 45 நாட்கள் பாதுகாப்பது கட்டாயமாகிறது. கால அவகாசம் முடிந்து, தேர்தல் கமிஷனின் உத்தரவுக்குப்பிறகு இந்த மெஷின்களும், பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்படும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை