| ADDED : மார் 25, 2024 12:45 AM
திருப்பூர்;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சர்ச்களில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இயேசு, 40 நாட்கள் உபவாசம் இருந்ததை, கிறிஸ்துவ மக்கள் தவக்காலமாக அனுசரிக்கின்றனர். இதன் ஒரு பகுதியாக, குருத்தோலை ஞாயிறு ஊர்வல நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இயேசு, ஜெருசலேம் நகர வீதிகளில் அழைத்து வரப்பட்ட போது, மக்கள் ஓசன்னா பாடல்கள் பாடி, குருத்தோலைகளை கையில் ஏந்தி, உற்சாகமாக வரவேற்றனர்.இதை நினைவு கூறும் வகையில், குருத்தோலை ஞாயிறு கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துவ மக்கள், சர்ச்களுக்கு சென்று குருத்தோலை பவனியில் ஈடுபட்டனர். சர்ச்சுகளில் இருந்து, குருத்தோலையில் செய்த சிலுவையை கையில் ஏந்தியபடி, பாடல்கள் பாடியபடி ஊர்வலமாக சென்றனர்.மீண்டும் சர்ச்சை சென்றடைந்து, திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. திருப்பூரில் உள்ள புனித கேத்தரீன் சர்ச், குமார் நகர் சி.எஸ்.ஐ., சர்ச் உள்ளிட்ட சர்ச்களில், குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமானவர்கள், குருத்தோலை மற்றும் குருத்தோலையில் செய்த சிலுவையுடன் பங்கேற்றனர்.