உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின் கம்பியை உயர்த்த ரூ.2.94 லட்சம் வசூல்; மின் வாரியம் பகல் கொள்ளை; பகீர் புகார்

மின் கம்பியை உயர்த்த ரூ.2.94 லட்சம் வசூல்; மின் வாரியம் பகல் கொள்ளை; பகீர் புகார்

திருப்பூர்: 'ஸ்மார்ட்' ரோடு அமைத்து ரோடு உயரமானதால், தாழ்வாக செல்லும் மின் கம்பியை உயர்த்த, தனி நபரிடம் 2.94 லட்சம் ரூபாய் வசூலித்தது, திருப்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.திருப்பூர், ஸ்ரீநகர் பகுதியில், ஸ்மார்ட் ரோடு அமைக்கப்பட்டதால், தரைமட்டம், மூன்று அடி அளவுக்கு உயர்ந்துள்ளது. அந்த ரோட்டின் குறுக்கே சென்ற மின்கம்பி தாழ்வாகி, வாகனம் சென்றுவர முடியாத சூழல் ஏற்பட்டது. அப்பகுதியை சேர்ந்த, 'யெஸ் இந்தியா கேன்' அமைப்பின் நிர்வாகி வால்ரஸ் டேவிட், பொதுமக்கள் சார்பில், இப்பிரச்னையை சரிசெய்ய வேண்டுமென, மின்வாரிய அலுவலகத்தில் மனு கொடுத்தார். பொதுமக்கள் பயன்படுத்தும் ரோட்டின் குறுக்கே செல்லும் மின்கம்பியை உயர்த்த, இரண்டு லட்சத்து, 94 ஆயிரத்து, 192 ரூபாய் செலுத்துமாறு, மின்வாரிய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். ஒரே ஒரு மின் கம்பத்தை மாற்றி அமைக்க, இவ்வளவு ரூபாயா என்று கேட்டதால், 'எங்களுக்கு செலுத்தவில்லை; மின்வாரியத்துக்கு செலுத்துகிறீர்கள்' என்று உடனே செலுத்துமாறு எச்சரித்துள்ளனர்.பாதிக்கப்பட்ட வால்ரஸ் டேவிட் கூறுகையில், 'மின்கம்பி தாழ்வாக செல்வதற்கும் எங்களுக்கும் தொடர்பில்லை. இருப்பினும், பொதுமக்கள் நலனுக்காக, மின் கம்பியை உயர்த்த வேண்டுமென கேட்டோம். யாராவது மனு கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினர். மனு கொடுத்த பிறகு, மின் கம்பத்துக்கு பணம் செலுத்த வேண்டும் என்று கூறி வேறு வழியின்றி செலுத்திவிட்டேன். மாநகராட்சி பணியால் பாதிப்பு என்றால், மாநகராட்சி மூலம் பணம் செலுத்தி சரிசெய்ய வேண்டும். மாறாக, பழிவாங்கும் நோக்கத்துடன் என்னிடம் வசூலித்துள்ளது குறித்து, கலெக்டரிடம் புகார் அளித்தேன். விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்,'' என்றார். ---2 படங்கள்திருப்பூர், ஸ்ரீநகர் பகுதியில், மின் கம்பி தாழ்வாக செல்வதால், வாகன போக்குவரத்து பாதிக்கப்படுகிறது.மின் கம்பியை உயர்த்த 2.94 லட்சம் ரூபாயை மின் வாரியம் வசூலித்தது தொடர்பாக கலெக்டர் கிறிஸ்துராஜிடம் மனு அளித்த 'யெஸ் இந்தியா கேன்' அமைப்பின் நிர்வாகி வால்ரஸ் டேவிட் உள்ளிட்டோர்.*

விதிமீறல் இல்லையாம்

மின்வாரிய செயற்பொறியாளர் ராமச்சந்திரனிடம் கேட்டபோது,'' தாழ்வாக செல்லும் மின்கம்பியை உயர்த்த வேண்டும் என்று, மனு கொடுத்தார். அதற்காக, 2.94 லட்சம் ரூபாய்க்கு மதிப்பீடு தயாரிக்கப்பட்டது; அதைத்தான் அவர் செலுத்தியிருக்கிறார். இதில், விதிமீறல் இல்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை