உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 1 வகுப்பில் கணினி அறிவியல் அல்லது வணிகவியல் பாடப்பிரிவில் சேர மாணவர் பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மேல்நிலைப்பள்ளிகளில், பிளஸ் 1 வகுப்பிற்கான அட்மிஷன் சூடுபிடித்துள்ளது.மதிப்பெண் 450க்கு மேல் பெற்றவர்களின் தேர்வு கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல் பாடப்பிரிவாகத்தான் உள்ளது. மருத்துவராகும் கனவுடன் உள்ள மாணவர்கள், கணினி அறிவியலுக்குப் பதிலாக, உயிரியல் பாடப்பிரிவில் சேர்கின்றனர்.அரசு பள்ளி மாணவர்கள் பெரும்பாலானோர், 'ஆர்ட்ஸ்' குரூப்பில் இணைய ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக, 350 முதல், 400 மதிப்பெண் பெற்ற மாணவர்களின் முதல் தேர்வாக வணிகவியல் பிரிவு உள்ளது. 400க்கு மேல் மதிப்பெண் பெற்ற சிலர், கணினி அறிவியலுடன் கூடிய வணிகவியல் பிரிவை தேர்வு செய்கின்றனர்.தலைமையாசிரியர்கள் சிலர் கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லுாரிகளில், கணினி சார்ந்த படிப்புகள் இருந்தாலும், கடந்தாண்டுகளில் இப்படிப்பை தொடர்ந்தவர் எண்ணிக்கை சற்று குறைவாக உள்ளது.அறிவியல், கணிதம் சார்ந்த படிப்பை தொடர்ந்தால், உயர்கல்விக்கு திருப்பூரை விட்டு வெளியே சென்று, தனியார் கல்லுாரிகளில் இணைய வேண்டும்.பொருளாதார ரீதியாக தயாராக வேண்டுமென பெற்றோர் நினைக்கின்றனர்; எனவே, முன்கூட்டியே திட்டமிட தயங்குகின்றனர். பி.காம் படிப்புக்குப் போட்டியிருந்தாலும் மாவட்டத்தில் உள்ள கல்லுாரியிலேயே சேர்ந்துவிட முடியும்.எனவே, பிளஸ் 1 வகுப்பில் சேரும் போது, பலர் வணிகவியல் பிரிவில் சேர ஆர்வம் காட்டுகின்றனர். அதேசமயம், இன்ஜினியர், டாக்டர் கனவுடன் தயாராகிற மாணவர்கள், கணிதம், அறிவியல் பிரிவையே தேர்வு செய்கின்றனர்.இவ்வாறு, தெரிவித்தனர்.