திருப்பூர்:முந்தைய ஆண்டுகளைவிட, இந்தாண்டு கோடை வெயில் மிக கடுமையாக வாட்டி வருகிறது. மார்ச் மாதம் முதல் படிப்படியாக அதிகரித்து, தற்போது வெயில் உச்சத்தை எட்டியுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு, தென்மேற்கு, வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யவில்லை. வெயில் அதிகரிப்பால், விவசாய பயன்பாட்டுக்கு தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. ஆயக்கட்டு பாசனங்கள் கைகொடுக்காதநிலையில், விவசாயிகள், இறவை பாசனத்தையே நம்பியுள்ளனர்.கிணறு, ஆழ்துளை கிணறுகளிலிருந்து தண்ணீர் எடுத்து, பயிர்களை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். வாட்டும் வெயில், தண்ணீர் தேவை அதிகரிப்பு காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் கிடுகிடுவென சரிந்துவருகிறது.பல்லடம், தாராபுரம், குண்டடம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதி விவசாயிகள், கால்நடை, பயிர் பாசனத்துக்கு போதிய தண்ணீர் இன்றி பரிதவிக்கின்றனர்.தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக, விவசாயிகள் பலர், புதிதாக ஆழ்துளை கிணறு அமைத்து வருகின்றனர். ஆயிரம் அடிக்கு மேல் துளையிடப்படு வதால், நிலத்தடி நீர் மட்டம் அபாய நிலைக்கு செல்லும் நிலை உருவாகி வருகிறது. 1,700 அடி வரை ஆழ் துளை கிணறு
இதுகுறித்து தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க தலைவர் காளிமுத்து கூறியதாவது: திருப்பூர் மாவட்டத்தில், பல்லடம், தாராபுரம், குண்டடம் பகுதி விவசாயிகள், சின்னவெங்காயம், கொத்தவரை, புடலை, பச்சைமிளகாய், சுரைக்காய் உள்ளிட்ட காய்கறிவகைகள் அதிக பரப்பில் பயிரிட்டுள்ளனர்.கோடை வெயில் தாக்கம் அதிகரித்துள்ளநிலையில், நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக சரிந்துள்ளது. இந்நிலையில், அறியாமையால் விவசாயிகள் பலர், போட்டி போட்டுக்கொண்டு, ஆயிரம் முதல், 1,700 அடி வரை, புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்கின்றனர்.ஆயிரம் அடி ஆழ்துளை கிணறு அமைத்து, கம்ப்ரஷர் மோட்டார் பொருத்துவதற்கு 2.75 லட்சம் ரூபாய் வரை செலவிட வேண்டியுள்ளது. நகைகளை அடமானம் வைத்தும், நிலங்களை பிணையமாகவைத்தும், வங்கி கடன் பெற்று, விவசாயிகள் ஆழ்துளை கிணறு அமைக்கின்றனர்.குறுகிய காலத்துக்குள் அதிகளவு தண்ணீர் உறிஞ்சப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் வேகமாக சரிந்துவிடுகிறது. அதிக ஆழத்தில் அமைக்கப்படும் புதிய ஆழ்துளை கிணறுகளும்கூட, விரைவிலேயே தண்ணீர் இல்லாத நிலையை எட்டிவிடுகின்றன. சில பகுதிகளில், ஆயிரம் அடிக்கு துளையிட்டும், வெறும் புகைதான் வருகிறது. கடன் பெற்று அவசரகதியில் ஆழ்துளை கிணறு அமைக்கும் விவசாயிகள் இதனால் பெரும் நஷ்டத்தை சந்திக்கும் நிலைக்கு தள்ளப்படுகின்றனர்.இன்னும் இரண்டு மாதங்கள் காத்திருந்தால், பருவமழைக்காலம் துவங்கி விடும்; விவசாயிகள், அதுவரை சற்று பொறுமையோடு காத்திருக்க வேண்டும். அதிக ஆழத்தில் அமைக்கப்படும் ஆழ்துளை கிணறுகளால், நிலத்தடி நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து, மீளமுடியாத வறட்சியில் தள்ளிவிடும்.கால்நடைகளின் தேவைக்கு, விலை கொடுத்து தண்ணீர் வாங்கி சமாளிக்க வேண்டும். ஆழ்துளை கிணறு அமைப்பது குறித்து, வேளாண் அதிகாரிகள், விவசாயிகளுக்கு வழிகாட்டுதல்கள் வழங்கவேண்டும். மழை நீர் சேகரிப்பு, திட்டமிட்டு பயிர் சாகுபடி செய்வதால், வறட்சி காலங்களை சமாளிக்க முடியும்.இவ்வாறு, அவர் கூறினார்.