உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / துவக்கநிலை வகுப்புகளுக்கும் கலைத்திருவிழா மாணவர்களை ஊக்குவிக்க அறிவுறுத்தல்

துவக்கநிலை வகுப்புகளுக்கும் கலைத்திருவிழா மாணவர்களை ஊக்குவிக்க அறிவுறுத்தல்

உடுமலை:அரசு மற்றும் அரசு உதவிபெறும் துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும், கலைத்திருவிழா நடத்துவதற்கான வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் தனித்திறன்களை வெளிப்படுத்த, கடந்த இரண்டாண்டுகளாக கலைத்திருவிழா நடத்தப்படுகிறது. இத்திருவிழா வட்டாரம், மாவட்டம், மாநில அளவில் நடத்தப்பட்டு, மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, 'கலையரசன்', 'கலையரசி' பட்டமும் வழங்கப்படுகிறது.கடந்த கல்வியாண்டு வரை, இப்போட்டிகள் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை மட்டுமே நடத்தப்பட்டன. துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கும், அவர்களை ஊக்குவிக்கும் வகையில் இத்தகைய போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என, பெற்றோர் எதிர்பார்த்தனர்.இதன் அடிப்படையில், நடப்பாண்டில் துவக்கப்பள்ளிகளுக்கும் போட்டிகள் நடத்த, கல்வித்துறை அட்டவணை வெளியிட்டுள்ளது.நடப்பாண்டில் 'சூழல் பாதுகாப்பு அனைவரின் பொறுப்பு' என்ற கருத்தில் போட்டிகள் நடத்துவதற்கு, கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு ஒரு பிரிவாகவும், மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலும், 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலும், ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு ஒரு பிரிவு, பிளஸ் 1, 2 ஒரு பிரிவாக என ஐந்து பிரிவுகள் பிரிக்கப்பட்டுள்ளன.நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை வகுப்பு மாணவர்களுக்கு நுண்கலை, வாய்ப்பாட்டு, நடனம், நாடகம், கருவி இசை உள்ளிட்ட கடந்த கல்வியாண்டை போல போட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.துவக்கப்பள்ளி குழந்தைகளுக்கு ஒப்புவித்தல் போட்டி, கதை கூறுதல், வண்ணம் தீட்டுதல், மாறுவேடம், பேச்சுப்போட்டி, மெல்லிசை, தேச பக்தி பாடல்கள், களிமண் பொம்மை செய்தல், நாட்டுபுற நடனம், பரத நாட்டியம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது.போட்டிகள் ஆக., 22ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் அந்தந்த பள்ளி அளவில் நடத்த வேண்டும். ஒரு மாணவர் குறைந்தபட்சம், ஒரு போட்டியிலாவது பங்கேற்க செய்வதற்கு, பள்ளி தலைமையாசிரியர் ஊக்குவிக்க வேண்டுமெனவும் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ