உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மானாட... மயிலாட... விவசாயிகள் திண்டாட! வேளாண் - வனத்துறையினர் கூறும் தீர்வு தான் என்ன?

மானாட... மயிலாட... விவசாயிகள் திண்டாட! வேளாண் - வனத்துறையினர் கூறும் தீர்வு தான் என்ன?

திருப்பூர் : விவசாய நிலங்களில் மான்கள், மயில்கள் தொல்லை அதிகரித்து வருகிறது என்ற விவசாயிகளின் தொடர் புகாரை தொடர்ந்து, மான்களின் கணக்கெடுப்பு நடந்து வருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி, புதுப்பாளையம், கோதபாளையம், ஊத்துக்குளி உள்ளிட்ட பல இடங்களில் மான்கள், மயில்கள் அதிகரித்து விட்டதால், விவசாய நிலங்களில் புகுந்து, பயிர்களை நாசம் செய்கின்றன. உடுமலை உள்ளிட்ட இடங்களில் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. இது குறித்து, மாவட்ட மற்றும் கோட்ட அளவில் நடக்கும் குறைகேட்பு கூட்டங்களிலும், விவசாயிகள் இக்கோரிக்கையை வலியுறுத்துகின்றனர்.

கண்காணிப்பு அவசியம்!

வேளாண் துறையினர் கூறியதாவது: சமீப ஆண்டுகளாக, திருப்பூரில் மயில்களின் இனப்பெருக்கம் அதிகரித்து விட்டது. அவை விவசாய நிலங்களுக்கும் புகுந்து பயிர்களை நாசப்படுத்துவதும் தொடர்கிறது. விவசாய நிலங்களுக்கும் விலங்கு, பறவையினங்கள் புகுவதை தடுப்பதற்கான ஆலோசனையை விவசாயிகள் பெற்று, நடைமுறைப்படுத்த வேண்டும்.

கம்பி வேலி போதும்!

வனத்துறையினர் கூறியதாவது: மயில்கள், பறந்து வந்து நேரடியாக விவசாய நிலங்களில் இறங்குவதில்லை. மாறாக, விவசாய நிலங்களின் எல்லையில் இருந்து நடந்தே வருகின்றன. ஆள் நடமாட்டம் மற்றும் தங்களுக்கு இடையூறு எதுவும் உள்ளது என தெரிந்தால், அவை, அந்நிலங்களுக்குள் அவை வராது.விவசாய நிலத்தில் ஒவ்வொரு பாத்தியாக அரை அடி, ஒரு அடி, ஒன்றரை அடி என்ற உயரத்தில் மூன்றடுக்கு கம்பி வேலி அல்லது கயிறு கட்டி வைத்தால் போதுமானது. அந்த கம்பி வேலியை தாண்டி மயில்கள் வராது. குறிப்பாக, வெயிலின் தாக்கம் அதிகமில்லாத, காலை, 6:00 - 8:30 மணி வரை, மாலை, 4:00 - 6:00 மணி வரை, மயில்கள் விவசாய நிலங்களுக்கு வரும். அந்த நேரத்தில், விவசாயிகள் மயில்களை விரட்டினால், மீண்டும் அவை வராது.

விரட்டும் 'நீல்போ'

வனத்துறையினர் கூறியதாவது: 'விவசாய நிலங்களில், கயிறு வேலி அமைத்து அதில் 'நீல்போ' என்ற ரசாயன கலப்பு இல்லாத மருந்தை, 'ஸ்ப்ரே' செய்ய வேண்டும். வேலியை தாண்டி மான், பன்றி ஆகியவை விவசாய நிலங்களுக்குள் புக முயற்சி செய்யும் போது, அந்த மருந்தின் வாசனையை நுகரப்பிடிக்காத மான், பன்றி அங்கிருந்து சென்றுவிடும்; விவசாய நிலங்களுக்குள் அவை புகுவதில்லை,' என்றனர்.

மான்கள் நடமாட்டம்

மாற்று ஆலோசனைவனத்துறை திருப்பூர் ரேஞ்சர் சுரேஷ்கிருஷ்ணன் கூறியதாவது:விவசாய நிலங்களில் மான், பன்றியால் விவசாய நிலங்கள் சேதப்படுத்தும் நிலையில், அதற்கான புகைப்பட ஆதாரத்துடன் கூடிய விவரங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில் இழப்பீடு பெற்று தர முயற்சி மேற்கொள்ளப்படும்.வன உயிரின நிதியம் உதவியுடன், அவிநாசி, புதுப்பாளையம், ஊத்துக்குளி, பல்லகவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மான்கள் அதிகளவு உள்ள நிலையில், மான்கள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கணக்கெடுப்பு முடிந்தபின், அவற்றின் நடமாட்டம் குறித்த தெளிவு கிடைக்கும். அதன்பின், உயரதிகாரிகளின் வழிகாட்டுதல் படி, மாற்று ஆலோசனை மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை