உடுமலை:மாநில நெடுஞ்சாலையிலுள்ள உயர் மட்ட பாலத்தின் ஓடுதளத்தில், கான்கிரீட் கம்பிகள் வெளியே தெரிவதால், அவ்வழியாக வாகன ஓட்டுநர்கள் அச்சத்துடன் செல்ல வேண்டியுள்ளது.பொள்ளாச்சி - தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில், பெதப்பம்பட்டி அருகே உப்பாறு ஓடை குறுக்கிடுகிறது. அங்கிருந்த தரைமட்ட பாலத்தை அகற்றி விட்டு, உயர் மட்ட பாலம், 2 கோடியே 75 லட்சம் ரூபாயில் கட்டப்பட்டது.கடந்த, 2019ல் பாலம் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இந்நிலையில், தற்போது, பாலத்தின் ஓடுதளத்தில் ஆங்காங்கே சேதம் ஏற்பட்டு, குழிகள் அதிகரித்துள்ளது. இருபுறங்களிலும், பாலத்தின் நுழைவாயில் பகுதியில், கான்கிரீட் கம்பிகள் வெளியே வந்துள்ளது. இக்கம்பிகள் இருசக்கர வாகனங்களின் டயர்களை பதம் பார்ப்பதால், அவ்வழியாக செல்லவே இருசக்கர வாகன ஓட்டுநர்கள் அச்சப்படும் நிலை உள்ளது.பாலம் பகுதியில் தெருவிளக்குகளும் இல்லாததால், இரவு நேரங்களில், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள், பாதசாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த மாநில நெடுஞ்சாலையில், கரூர், தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு அதிகளவு கனரக வாகனங்கள் செல்கின்றன. முக்கிய வழித்தடத்தில் உள்ள இந்த பாலத்தின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகியுள்ளதால், நெடுஞ்சாலைத்துறையினர் உடனடியாக ஆய்வு செய்ய மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.மக்கள் கூறியதாவது: பாலம் பயன்பாட்டுக்கு வந்தது முதல், பல முறை ஓடுதளம் சேதமடைந்து விட்டது. பாலத்தில் பாதசாரிகள் நடப்பதற்கான பகுதியும் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறி விட்டது.எனவே, நெடுஞ்சாலைத்துறை உடுமலை உட்கோட்ட அதிகாரிகள் பாலத்தின் ஓடுதளத்தை சீரமைப்பதுடன், உறுதிதன்மை குறித்த ஆய்வையும் மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு, தெரிவித்தனர்.