உடுமலை, : உடுமலையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், கற்போர் கணகெடுப்பு பணிகள் துவங்கியுள்ளது.மாநிலத்தில், 15 வயதுக்கு மேற்பட்ட அடிப்படையான எழுத்தறிவு இல்லாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு அடிப்படை கற்றல் அறிவை வழங்க, புதிய பாரத எழுத்தறிவு திட்டம் உள்ளது.இத்திட்டத்தின் கீழ், துவக்கம் முதல் மேல்நிலை வரை, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளை மையங்களாகக்கொண்டு, 15 வயதுக்கும் மேற்பட்ட எழுத்தறிவு இல்லாதவர்களுக்கு கல்வி கற்றுத்தரப்படுகிறது.ஒவ்வொரு பகுதிகளிலும், கற்போரை ஒருங்கிணைத்து, மையத்தில் அடிப்படை கல்வியை தன்னார்வலர்கள் கற்றுத்தருகின்றனர். அவர்களுக்கு கல்வியாண்டின் தேர்வு நடத்தப்படுகிறது.நடப்பாண்டில், இவ்வாறு எழுதப்படிக்க தெரியாத, 15 வயதுக்கு மேற்பட்டோரை கண்டறிவதற்கான முகாம், இம்மாதம் துவங்கியுள்ளது.முகாமில், தமிழ் மொழியில் அடிப்படை கற்றல் இல்லாதவர்களை கண்டறிய வேண்டும். தங்களின் ஊர் பெயர், தங்களின் பெயர் போன்ற அடிப்படைகளை வாசிக்கவும், எழுதவும் செய்து கணக்கெடுப்பு நடத்த வேண்டும்.எழுத்தறிவு இல்லாதவர்களின் விபரங்களை, பள்ளிகளில் உள்ள மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்களில் இணைக்க வேண்டும். அரசுப்பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கணக்கெடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.பிற மாநிலங்களைச்சேர்ந்தவர்கள், புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், மலைவாழ் பகுதிகளைச்சேர்ந்த எழுத, படிக்கத்தெரியாதவர்களையும் விடுபடாமல் கண்டறிய அறிவுறுத்தப்பட்டுள்ளது.அனைத்து விபரங்களையும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளிகல்வி மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்திடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கணகெடுப்பு பணிகள் மே 28ம் தேதி வரை நடக்கிறது.