திருப்பூர்;'கோடை மழையை, மக்கள் பயன்படுத்திக் கொள்ளும் வகையில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு திட்டத்தை ஊக்குவிக்க வேண்டும்' என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.பருவமழை தவறும்போது நீராதாரங்கள் வறண்டு, தண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்படும் நிலை ஏற்படுகிறது. அந்த தவிப்பை போக்கும் வகையில் தற்போது பெய்து வரும் கோடை மழை, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சில நாட்களாக மாலை, இரவு நேரங்களில் கொட்டி தீர்க்கும் கோடை மழையால், சாலையெங்கும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. நிரம்பும் மழைநீர்
மாநிலத்தில், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ள போதும், அது நடைமுறையில் பின்பற்றப்படுவதில்லை என்பது தான் வேதனை. ஊராட்சி பகுதி களில் குடிமராமத்து, நுாறு நாள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் துார்வாரப்பட்ட குளம், குட்டைகள், மழையில் நிரம்பி ததும்பும் நிலையில், மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.'வீடுகள், கட்டடங்களில் மழைநீரை சேமிக்க கட்டமைப்பு இல்லாமல் போனாலும், கூரையில் இருந்த விழும் மழைநீரை நிலத்தடியில் செலுத்துவதற்குரிய கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்' என, அரசு அறிவுறுத்தியது; இருப்பினும், இது உரிய முறையில் பின்பற்றப்படுவதில்லை.தற்போது பெய்து வரும் கோடை மழையில், சாலைகளில் மழைநீர் பெருக் கெடுத்து ஓடுகிறது; மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாததே இதற்கு காரணம். விழிப்புணர்வும் வீண்
திருப்பூர் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள 'ஸ்மார்ட் ரோடு'களில் கூட, தண்ணீர் பெருமளவில் வழிந்தோடுகிறது. திருப்பூர் மாநகராட்சி சார்பில், கடந்தாண்டு, செப்., மாதம், திருப்பூர் மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளிலும், மழைநீர் சேகரிப்பு தொட்டி அமைக்கும் பணி நடந்தது.மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்த ஊர் வலங்களும் நடத்தப்பட்டது. மழைநீர் சேகரிப்பு திட்டத்தை விளக்கும் வகையில் ஒயிலாட்டம், கும்மியாட்டம், தெருக்கூத்து உள்ளிட்டவையும் நடத்தப்பட்டன. அவ்வாறு வழங்கப்பட்ட விழிப்புணர்வும், மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பும் தற்போது பயன் தருவதாக தெரியவில்லை. எனவே, மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து உள்ளாட்சி நிர்வாகங்களும் மழைநீர் சேகரிப்பில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.