உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிளை கால்வாயை முழுமையாக புதுப்பிக்கணும்! விவசாயிகள் எதிர்பார்ப்பு

கிளை கால்வாயை முழுமையாக புதுப்பிக்கணும்! விவசாயிகள் எதிர்பார்ப்பு

உடுமலை:இரண்டாம் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ள, புதுப்பாளையம் கிளைக்கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.பி.ஏ.பி., பாசனத்தில், குடிமங்கலம் பகுதி நிலங்கள் பாசன வசதி பெற, கடந்த, 1964ல், புதுப்பாளையம் கிளை கால்வாய் கட்டப்பட்டது.பிரதான கால்வாயில் இருந்து பூசாரிபட்டி ஷட்டர் வழியாக இக்கால்வாயில், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும். ஷட்டரில் இருந்து, 40 கி.மீ., நீளத்துக்கு இக்கால்வாய் அமைந்துள்ளது.இக்கால்வாய் வாயிலாக இரண்டாம் மண்டல பாசனத்தில், 7 ஆயிரத்து 219 ஏக்கரும், 4ம் மண்டலத்தில், 7 ஆயிரத்து 310 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது.இக்கால்வாயில் இருந்து, 30 பிரிவு பகிர்மான வாய்க்கால் வாயிலாக, விளைநிலங்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கால்வாய் பயன்பாட்டுக்கு வந்தது முதல் முழுமையாக புதுப்பிக்கப்படவில்லை.இதனால், பல இடங்களில், கால்வாய் கரை சேதமடைந்துள்ளது; பகிர்மான கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கும் ஷட்டர் பயன்படுத்த முடியாத நிலைக்கு மாறியுள்ளது.இருகரைகளிலும், கற்கள் பெயர்ந்து படிப்படியாக விழுந்து, கால்வாய் உடையும் அபாயத்தில் உள்ளது. பராமரிப்பில்லாத கரையால், பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் போது, அவ்விடங்களில், தண்ணீர் விரயமாகிறது.ஷட்டர்களையும் பராமரிக்காததால், நீர் நிர்வாகத்தில் சிக்கல் ஏற்பட்டு, கடைமடை பாசன பகுதிகள் பாதிக்கப்படுகின்றன.பல்வேறு காரணங்களால், மண்டல பாசனத்தில், சுற்றுகள் குறைக்கப்பட்டு வரும் நிலையில், நீர் விரயத்தால், பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது.எனவே, புதுப்பாளையம் கிளை கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வருகிறது.ஆனால், மண்டல பாசனத்துக்கு முன் கரையிலுள்ள முட்புதர்கள் மட்டுமே அகற்றப்படுகிறது. இந்தாண்டு மண்டல பாசன சீசன் துவங்கும் முன் கால்வாயை முழுமையாக புதுப்பிக்க வேண்டும் என, அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை