உடுமலை: மாநில நெடுஞ்சாலை மற்றும் இதர ரோடுகளில், வடிகால்களை முறையாக பராமரிக்காததால், மழைக்காலங்களில், ரோட்டில் வெள்ளம் பெருக்கெடுத்து, போக்குவரத்து பாதிப்பது தொடர்கதையாக உள்ளது.உடுமலை, மடத்துக்குளம் நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டங்களின் கீழ், தாராபுரம், பல்லடம் மாநில நெடுஞ்சாலை மற்றும் மாவட்ட முக்கிய, இதர ரோடுகள் பராமரிக்கப்பட்டு வருகிறது.பருவமழைக்கு முன், ரோட்டோரத்தில் உள்ள வடிகால்களை சீரமைப்பது நெடுஞ்சாலைத்துறையின் முக்கிய பணியாகும்.வடிகாலில் உள்ள புதர்களை அகற்றி, ரோட்டுக்கு மழை நீர் வராமல் வெளியேற தேவையான பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.இந்தாண்டு இப்பணிகள் குறித்து நெடுஞ்சாலைத்துறையினர் கண்டுகொள்ளாததால், கோடை மழை காலத்தில், பெரும்பாலான ரோடுகளில், போக்குவரத்து துண்டிக்கப்படும் நிலை உருவானது.உதாரணமாக, உடுமலை - தாராபுரம் மாநில நெடுஞ்சாலை, செஞ்சேரிமலை, திருமூர்த்திமலை, ஆனைமலை ரோடு உள்ளிட்ட ரோடுகளில், பல இடங்களில், தண்ணீர் தேங்கி நின்று, இரு சக்கர வாகன ஓட்டுநர்கள் அவ்வழியாக செல்ல முடியவில்லை.தரை மட்ட பாலங்கள் அமைந்துள்ள பகுதிகளில், பிளாஸ்டிக் உட்பட கழிவுகள், குழாய்களில் அடைத்துக்கொள்வதால், பாலத்தின் மீது தண்ணீர் செல்கிறது. இதனால், பாலத்தை அச்சத்துடன் இருசக்கர வாகன ஓட்டுநர்கள் கடக்க வேண்டியுள்ளது.மழை இடைவெளி விட்டும், சில ரோடுகளில், தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற எவ்வித பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. இதே நிலை நீடித்தால், பெரும்பாலான ரோடுகளில் மழை நீர் தேங்கி, ஓடுதளம் சேதமடையும்.தற்போது பருவமழை துவங்கி ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. நகரிலுள்ள ரோடுகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால், வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்பட்டு அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றனர்.இதனை நெடுஞ்சாலைத்துறையினர் சீரமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.முக்கிய ரோடுகள் தடுப்பணையாக மாறும் முன், நெடுஞ்சாலைத்துறையினர் வடிகால்களை சீரமைத்து, மழை நீர் வெளியேறும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசும் இப்பிரச்னையில் தலையிட்டு தீர்வு காண வேண்டும்.