உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கால்வாய் துார்வாரும் பணி துவங்கியாச்சு! ஒன்றிய அதிகாரிகள் தகவல்

கால்வாய் துார்வாரும் பணி துவங்கியாச்சு! ஒன்றிய அதிகாரிகள் தகவல்

உடுமலை;உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் ஒன்றியங்களில், தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ்,பி.ஏ.பி., கால்வாய்கள் துார்வாரும் பணி துவங்கியுள்ளது என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பி.ஏ.பி., இரண்டாம் மண்டல பாசனத்தில், உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றியங்களில், பல ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது.இரண்டு ஆண்டு இடைவெளிக்கு பிறகு, இந்த மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுவதால், பகிர்மான கால்வாய்கள் அனைத்தும் துார்வாரப்படாமல், மண் மேடாக மாறி விட்டது.இந்த கால்வாய்களை, தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களை கொண்டு துார்வார வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர்.அதன்படி, திருப்பூர் மாவட்ட நிர்வாகம்,தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், பி.ஏ.பி., கால்வாய்களை, துார்வாரும் பணிகளை மேற்கொள்ள நிதி ஒதுக்கீடு செய்துஉத்தரவு வெளியிட்டது.அதன்படி, கால்வாய் கரைகளில் வளர்ந்துள்ள செடி, கொடி, முட்புதர்களை அகற்றுவதற்கும், மண் படிமானங்களை அகற்றும் பணிகள் வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டுள்ளது.உடுமலை ஒன்றியத்தில் கண்ணம்மநாயக்கனுார், சின்னவீரம்பட்டி, போடிபட்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்வாய்களில் 6 பணிகளும், மடத்துக்குளம் ஒன்றியம், மைவாடி, தாந்தோணி ஊராட்சிகளுக்கு உட்பட்ட கால்வாய்களில் மூன்று பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.குடிமங்கலம் ஒன்றியத்தில்,பொன்னேரி, கோட்டமங்கலம், குடிமங்கலம், ஆத்துக்கிணத்துபட்டி, பூளவாடி, கொண்டம்பட்டி, விருகல்பட்டி, புதுப்பாளையம், கொங்கல்நகரம், சோமவாரப்பட்டி, இலுப்பநகரம், வடுகபாளையம், ஆமந்தகடவு, அனிக்கடவு, பெரியபட்டி உள்ளிட்ட ஊராட்சிகளில் மொத்தமாக, 30 பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் துவங்கியுள்ளது என ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இரண்டாம் மண்டல பாசனத்துக்கு, வரும், 19ல் திருமூர்த்தி அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட உள்ளது. எனவே, ஊராட்சிகளில், பணிகளை கண்காணிப்பு செய்ய வேண்டும் என,விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !