உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு அவகாசம் தந்தும் ஆர்வம் இல்லை

பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு அவகாசம் தந்தும் ஆர்வம் இல்லை

திருப்பூர்:பிறப்பு சான்றிதழில் பெயர் பதிவு செய்ய, மூன்றாவது முறையாக அவகாசம் நீட்டித்தும், பெயர் பதிவில் பலரும் ஆர்வம் காட்டவில்லை.குழந்தை பிறந்த, 21 நாட்களுக்குள் பிறப்பை பதிவு செய்து, இலவச பிறப்பு சான்றிதழ் பெற முடியும். திருத்தி அமைக்கப்பட்ட பிறப்பு, இறப்பு பதிவு விதிப்படி, 2000 ஜன., 1க்கு முன், பெயரின்றி பதிவு செய்யப்பட்ட பிறப்பு பதிவுகளுக்கு, 2014 டிச., 31 வரை பெயர் பதிவு செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. கால அளவு முடிந்தும், பலர் பதிவு செய்யாததால், அவகாசம் மேலும் ஐந்து ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டு, 2019 டிச., 31 வரை இரண்டாவது முறையாக நீட்டிக்கப்பட்டது. அப்போது பெயர் பதிவு செய்யாதவர்களுக்காக மூன்றாவது முறையாக மேலும் ஐந்து ஆண்டுகள், 2024 டிச., 31 வரை அவகாசம் தலைமை பதிவாளரால் நீட்டிக்கப்பட்டது.அவகாசம் முடிய, இன்னும் ஏழு மாதங்கள் உள்ள நிலையில், மீண்டும் அவகாசம் நீட்டிக்கப்பட வாய்ப்பு குறைவு. அவகாசம் முடிந்தால், உரிய ஆவணங்களுடன் 200 ரூபாய் தாமத கட்டணத்தை செலுத்தி, பிறப்பு சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என பொது சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது.அதிகாரிகள் கூறுகையில், ''தாமதக்கட்டணம் குறைவு என்பதால், பலரும் பிறப்பு, பெயர் பதிவு சான்றிதழ் பெற ஆர்வமுடன் இருப்பதில்லை. சட்டப்படி அனைவருக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதால், கால அவகாசம் தொடர்ந்து நீட்டித்தும், அறிவிப்பும் வெளியிடப்பட்டு வருகிறது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ