உடுமலை:உடுமலை அருகே, ஆண்டியகவுண்டனுார் ஊராட்சிக்கு உட்பட்ட உரல்பட்டியில், ரேஷன் கடை, வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் கிராம தபால் நிலையம் ஆகியவை ஒரே கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.ரேஷன் கடை வாயிலாக, 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர். மேலும், வி.ஏ.ஓ., அலுவலகம் மற்றும் தபால் நிலையங்களுக்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வந்து செல்கின்றனர்.ரேஷன் கடை பயன்பாட்டிற்கு என, கடந்த, 2001-2002ம் ஆண்டில் கட்டப்பட்ட கட்டடத்தில், வி.ஏ.ஓ., மற்றும் தபால் அலுவலகமும் செயல்பட்டு வருகிறது.இக்கட்டடத்தை பராமரிக்காததால், மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவர்கள் இடிந்தும், கட்டுமானங்கள் சிதிலமடைந்தும், எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.அரசு அலுவலகங்களுக்கு வருவோரும், ரேஷன் பொருட்கள் வாங்க காத்திருக்கும் மக்கள் மீது, மேற்கூரை, முன்பக்க கூரை இடிந்து விழுந்து, விபத்துக்களும் ஏற்பட்டுள்ளதால், அச்சத்துடனே பொதுமக்கள் வந்து செல்லும் அவல நிலை உள்ளது.மழை காலங்களில், கட்டடம் ஒழுகுவதால், ரேஷன் பொருட்கள் சேதம் அடைந்து வருகிறது. கட்டடடம் கட்டப்பட்டு, 23 ஆண்டுக்கு மேலான நிலையில், சிதிலமடைந்த கட்டடத்தை இடித்து, புதிய கட்டடம் கட்ட வேண்டும்.போதிய இடவசதி உள்ள நிலையில், ரேஷன் கடை, வி.ஏ.ஓ., மற்றும் தபால் அலுவலகங்களுக்கு தனித்தனியாக கட்டடங்கள் கட்ட வேண்டும், என, இப்பகுதி மக்கள், ஊராட்சி நிர்வாகம் சார்பில், பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.எனவே, ஆபத்தான நிலையில் உள்ள இந்த கட்டடத்தை உடனடியாக அகற்றி விட்டு, புதிய கட்டடங்கள் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.