திருப்பூர் பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பனியன் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர் கள் பொங்கல் பண் டிகைக்காக சற்றே ஓய்வெடுத்துள்ளனர்.உழைக்கும் பண்பினை போற்றும் வகையில் மாவட்டம் முழுவதும், பொங்கல் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.பொதுமக்கள் தங்கள் வீட்டு வாசலில், பொங்கல் வைத்து, குடும்பத்தினர் உற்சாகமாக கொண்டாடினர். தொடர்விடுமுறை காரணமாக, பொங்கல் கொண்டாடியதும், வெளியே ஜாலியாக சுற்றிப்பார்க்க கிளம்பிவிட்டனர்.தொடர்விடுமுறை காரணமாக, தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு தங்கள் குடும்பத்துடன் சென்று விட்டனர். பெரும்பாலான கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டதால், வடமாநில தொழிலாளர்களும் நேற்று வெளியே தலைகாட்டவில்லை. பனியன் நிறுவனங்களில், பொங்கல் வைத்து கொண்டாடினர்.இதனால், நேற்று பகல் நேரத்தில், திருப்பூரின் முக்கிய ரோடுகள், வாகன போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டன. பொது அமைப்புகள், இளைஞர் அமைப்புகள், குடியிருப்போர் நலசங்கங்கள் சார்பில், சமத்துவ பொங்கல் விழா, விளையாட்டு போட்டிகள் கலகலப்பாக நடந்தன.திருப்பூர், அவிநாசி உட்படல பல பகுதியில், போலீசார் குடியிருப்பில் சமத்துவ பொங்கல் விழா, கோலாகலமாக கொண்டாடப்பட்டது. திருப்பூர் போலீஸ் குடியிருப்பு பகுதியில், பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. கமிஷனர் பிரவீன்குமார் அபினபு பங்கேற்று பொங்கல் விளையாட்டு போட்டிகளை துவக்கி வைத்தார். முன்னதாக, பெண் போலீசார் பொங்கல் வைத்தனர். அவிநாசி போலீஸ் குடியிருப்பில், பொங்கல் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவுக்கு, திருப்பூர் எஸ்.பி., சாமிநாதன் தலைமை வகித்தார். ஏ.டி.எஸ்.பி., ஜான்சன், அவிநாசி டி.எஸ்.பி., சிவகுமார் உள்ளிட்டோர் முன்னிலையில் பொங்கல் விழா நடைபெற்றது.